31 ஆகஸ்ட், 2009

சரணடைந்த - கைதான புலி

உறுப்பினர்களின்

புனர்வாழ்வுக்கென 200 கோடி ரூபா


சர்வதேச இடம்பெயர்ந்தோர்
அமைப்புடன் ஒப்பந்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்


எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி ரூபா வரையிலான நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சும் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பும் இவ்வாரமளவில் கொழும்பில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளன.

புலி பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கு இதுபோன்று பல்வேறு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தினடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிதியை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா நாடுகளும் ஜப்பான், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எல். ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த அல்லது மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்ட குழுவினருக்கு புனர்வாழ்வு அளிக்குமுகமாக கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றி கற்பித்தல், தளபாடம் தயாரித்தல், தச்சுத் தொழில் செய்தல், ஆடை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக