6 ஜூன், 2011

எஞ்சியிருக்கும் மக்களை வருட இறுதிக்குள் குடியேற்றுவோம்: குணரட்ண

வவுனியா முகாம்களில் எஞ்சியுள்ள அகதி மக்களை இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் சுமார் 4000 பேர் வரையான மக்கள் முகாம்களில் இருந்து செல்வதற்கு விருப்பமற்றவர்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எந்த மட்டத்தில் உள்ளது என்பது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: குறைந்தளவிலான தொகையினரே தற்போது வவுனியா முகாம்களில் தங்கியுள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றிவிட முடியும் என்று நம்புகின்றோம்.

அனைத்து மக்களையும் மிக விரைவில் மீள்குடியேற்றிவிடவேண்டும் என்றுதான் நாங்களும் முயற்சிக்கின்றோம். ஆனால் நிலக்கண்ணிவெடிகளே இதற்கு பிரதான தடையாகவுள்ளன.

நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரதேச செயலாளர் உறுதிபடுத்தியதும் நாங்கள் மீள்குடியேற்றங்களை ஆரம்பித்துவிடுவோம்.

இதேவேளை வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களில் சுமார் 4000 பேர் அங்கிருந்து செல்வதற்கு விருப்பமற்றவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இந்த நிலைமை தொடர்பில் ஆய்வு செய்துவிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக