வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் எஸ் எம் கிருஷ்ணா
இலங்கைப்போரின் இறுதி கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மீறல் புகார் தொடர்பான சாட்சிகள் இருந்தால், அது இலங்கை சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதிகட்ட போர் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியான நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பீரிஸ் அவர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
திங்கள் கிழமையன்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நடத்திய பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இருதரப்பு உறவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
போருக்குப் பிறகு நடைபெறும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். எல்எல்ஆர்சி எனப்படும் படிப்பினை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, காவலில் வைத்தல், சட்டம், ஒழுங்கு, நிர்வாகம், மொழிப் பிரச்சினை, வாழ்வாதாரம் மற்றும் சமூக-பொருளாதார சிக்கல்கள் தொடர்பாக அக்குழு அளித்திருக்கும் இடைக்காலப் பரிந்துரைகள் தொடர்பாகவும் இந்திய ஆட்சியாளர்களிடம் பீரிஸ் எடுத்துரைத்தார்.
அதே நேரத்தில், முகாம்களில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்புதல் உள்பட மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், நியாயமான நல்லிணக்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசரச் சட்டங்களை விரைவாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய இந்திய வெளியுறவு அமைச்சர், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக கூட்டறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பீரிஸ்,
ஐ.நா. பொதுச் செயலருக்கு யோசனை கூற அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை, உண்மை நிலவரம் தெரியாமல், உண்மைக்கு மாறான தகவல்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை என்று சாடினார் பீரிஸ். இலங்கையை மீண்டும் வலுவான நிலைக்குக் கொண்டு வரும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதற்குப் பதிலாக, அந்த அறிக்கை பெரும் தடைகளை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் வேதனை வெளியிட்டார்.
தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு பீரிஸ் பதிலளிக்கும்போது, த.தே.கூ. மற்றும் ஈபிடிபி கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தசுற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாய் நாடு திரும்ப விரும்புவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, சுமார் 60 ஆயிரம் அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், நிலைமை சீரடைந்துவிட்ட நிலையில், பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்ப விரும்புவதாகவும் பீரீஸ் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா அவர்கள், ஐ.நா. குழு அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு மீதும், ஜனாதிபதிக்கு எதிராகவும் சில கருத்துக்களைத் தெரிவித்திருப்பது குறித்து என்ன சொல்கிறீர்ரள் என இலங்கை அமைச்சரிடம் கேட்டபோது, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து தான் கடிதம் எழுதியுள்ளதாகவும், இருதரப்பு தொடர்பான விடயங்களில் அவருடன் சேர்ந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக