12 மே, 2011

பொன்சேகாவினாலேயே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு உரிய பதிலளிக்க முடியும்

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு உரிய பதிலளிக்கக்கூடியவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே ஆவார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான விபரங்கள் அவருக்கே தெரியும். எனவே அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையினை கண்டிராத அதனை வாசிக்காத மக்களிடம் அதற்கெதிராக கையொப்பம் பெறுவது அவர்களை ஏமாற்றும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே அவ்வறிக்கையினை அவர்கள் வாசித்தறிய கூடிய தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் மொழி பெயர்த்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையினை எத்தனை பேர் வாசித்துள்ளார்கள்? எத்தனை ஊடகங்கள் அதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முழுமையாக வெளியிட்டுள்ளன? இப்படியான நிலையில் சாதாரண மக்களிடம் அதற்கெதிராக கையெழுத்து பெறுவது அவர்களை ஏமாற்றும் செயலாகும்.

குறித்த அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ள என்பதை சகலரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதனை தமிழ் சிங்கள மொழிகளில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும். அதன் பின்னரே அதற்கு எதிராக அவர்களிடம் கையெழுத்துக்களை பெற வேண்டும்.

ஐ.நா நிபுணர் குழுவினை முழுமையாக நிராகரிப்பதாக கூறி வந்த அரசாங்கம் தற்போது அந்த அறிக்கை தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூறுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. இந்த அறிக்கை தொடர்பில் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. அதனாலேயே இந்த தடுமாற்றம்.

உண்மையில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி ழுழு தகவல்களை அறிந்தவர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே. அவராலேயே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு உரிய பதில் கூற முடியும் அத்தோடு இலங்கையின் கீர்த்தியினையும் எமது இராணுவத்தினரையும் காப்பாற்ற முடியும் .

இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு 2600 ஆவது புத்த ஜயந்தியிலாவது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக