10 செப்டம்பர், 2010

அகதிக் கப்பலில் சென்ற ஒருவர் தடுத்துவைப்பு

கனடா சென்ற அகதிக் கப்பல் எம்வி சன் சீயில் இருந்தவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலி இயக்க உறுப் பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தடுத்து வைக்குமாறு கனடிய குடிவரவு, அகதிகள் சபை உத்தரவிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேற்ற வாசி, விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டதாக குறிப்பிடும் பத்திரிகை அறிக்கை ஒன்றை கனடிய எல்லை சேவை நிலையத்தின் சட்ட ஆலோசகர் முன்வைத்து சுனாமி நிவாரணத்திற்கென 12 ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்காக அனுப்பப்பட்ட தூதுக்குழுவில் சந்தேகநபரும் அடங்கியிருந்ததாக மேற்படி பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆரம்ப அடையாளம்காணும் நேர்காணலில், சந்தேகநபர் தாம் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என்பதையோ எந்தவித தூதுக்குழுவிலும் இடம்பெற்றதையோ இலங்கைக்கு வெளியே பயணித்ததையோ நிராகரித்தார் என்று சட்ட ஆலோசகர் பிறிபேர்க் தெரிவித்தார்.

ஊடக அறிக்கையை சந்தேகநபருக்கு காண்பித்த போது தாம் ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றதை ஒப்புக்கொண்ட அவர், ஊடகக் குழு ஒன்றின் உறுப்பினராகவே தாம் அங்கு சென்றதாக கூறினார்.492 தமிழ் குடியேற்றவாசிகளில் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலாவது நபர் இவரே ஆவார்.

ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி அகதிக் கப்பல் அங்கு போய்ச் சேர்ந்ததிலிருந்து மூன்றாவது தடவையாக தடுப்புக் காவல் சோதனைக்கு உட்படுத்தப்படும் முதல் தொகுதியினர் மத்தியில் இவரும் ஒருவராவார். மேப்பிள் றிட்ஜிலுள்ள பிறேஸர் பிராந்திய சீர்திருத்த நிலையத்தில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விசாரணையின் போது சந்தேக நபர் பேசும்படி கோரப்படவில்லை. ஆனால், அவர் சார்பில் சட்ட ஆலோசகர் அன்ரியா ஷிராக் வாதாடினார். பத்திரிகை அறிக்கையில் சந்தேக நபர் இலங்கையர்களுடன் பயணித்தார் என்று இருக்கிறதே தவிர அவர் விடுதலைப்புலி உறுப்பினர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று செல்வி ஷிராக் எடுத்துக் கூறினார். 30 நாட்களில் மற்றமொரு விசாரணைக்காக அவரை தொடர்ந்து தடுத்து வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக