30 ஜூலை, 2010

வெள்ளைக்கொடி வழக்கின் 20 சாட்சியாளர்களையும் ஆஜர்படுத்துமாறு மேல்நீதிமன்றம் உத்தரவு









முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீதான வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு வழக்கில் பெயரிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதற்கான அழைப்பாணையினை அவர்களுக்கு அனுப்புமாறும் கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் அவர் பாராளுமன்றம் சென்று வருவதற்கு உரிய வசதிகளை செய்து கொண்டுக்குமாறும் மேல் நீதிமன்றம் இராணுவ அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் வெள்ளைக்கொடியுடன் வந்த சந்தர்ப்பத்தில் அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என்றும் அதற்கான உத்தரவு பாதுகாப்பின் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைகக்கு செவ்வி வழங்கியிருந்தாக குற்றம் சாட்டி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர டபிள்யூ.எம். பீ.பி. வராவேவ மற்றும் சுல்பிகார் ரசீம் ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக இந்த வழக்கில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் நேற்று ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் அவதானித்த நீதிபதிகள் குழு, தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பிரகாரம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராக்குமாறும் அதற்கான அழைப்பானையினை அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா தரப்பில் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் குழு தெரிவித்தது.

இங்கு அரச தரப்பில் அஜரான பிரதி சட்டமா அதிபர் இந்த வழக்கிற்கு சாட்சிகளாக மூன்று இருவெட்டுக்கள் சமர்ப்பிக்க படவுள்ளதாகவும், தெரிவித்தார். பிரதிவாதியான ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் அஜரான சட்டத்தரணி சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்றிக்கா ஜேன்ஸுன் குறிப்புப் புத்தகம் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரை பாராளுமன்றம் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன் அவரது சிறப்புரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை நீதிமன்றம் விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனையடுத்து பொன்சேகா பாராளுமன்றம் செல்வதற்கு உரிய வசதிகளை மேற்கொள்ளுமாறும் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக