7 ஜூன், 2010

இந்திய விஜயத்தின்போது மன்மோகன் சிங், சோனியா பிரதீபா, கிருஷ்ணா உட்பட பலரையும் ஜனாதிபதி சந்திப்பார்

இந்தியாவுக்கு நாளை செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க , ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது பாதுகாப்பு உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்க சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ“.எல். பீரிஸ் அங்கிருந்தவாறே இந்தியாவின் புதுடில்லியை சென்றடைவார் என்றும் தெரியவருகின்றது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினர் அங்கு 11 ஆம் திகதிவரை தங்கியிருப்பர் என்றும் இதன்போது சில உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பன கைச்சாத்திடப்படும் என்றும் வெளிவிகார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை குழுவினரின் விஜயம் தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் நேற்று மாலையே புதுடில்லிக்கு விஜயம் செய்ததாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. இந்திய தலைவர்களுடனான சந்திப்புக்களின்போது தேசிய பிரச்சினை தீர்வுத்திட்டம், வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்ற விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தெரியவருகின்றது.

இந்திய விஜயத்தின்போது பொருளாதார விடயங்கள் குறித்து ஆராயப்படுவது முக்கிய அம்சமாக அமையும் என்று கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலைமையில் சில அமைச்சர்கள் இடம்பெறு வார்கள் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

இதேவேளை கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக