6 பிப்ரவரி, 2010

யாழ். கோட்டை பகுதி:
தேசிய மரபுரிமை மையமாக புனரமைக்க பாரிய திட்டம்



1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் மீள்கட்டுமானம் செய்யப்பட்ட யாழ். கோட்டை 104.5 மில்லியன் ரூபா செலவில் புதுப் பொலிவு பெறவுள்ளது.

நெதர்லாந்து அரசின் உதவியுடன் 62.1 மில்லியன் ரூபாவும், தேசிய மட்டத்தில் 42.4 மில்லியன் ரூபாவும் இத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

யாழ். கோட்டையின் சரித்திர முக்கியத்து வம் கருதியும், சுற்றுலாத்துறையாக யாழ். கோட்டை பகுதியை புனரமைக்கவும் என கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன அமைச்சரவைக்கு ஆலோசனையை சமர்ப்பித்திருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவையின் பேச்சாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

4 வருடத்துக்குள் அபிவிருத்தியில் முன்னேற்றமிக்க நாடாக இலங்கையை உருவாக்க முடிந்துள்ளது

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை

(பள்ளேகலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், எம். ஏ. அமீனுல்லா)

நான்கு வருட குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த நாடாக இலங்கையை உலகுக்குக் காட்ட முடிந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்வேறு சவால்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டைப் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வருடத்திற்கு வருடம் நாடு அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்து வருவதுடன் பல வெற்றிகளையும் உரித்தாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

கண்டி பள்ளேகலயில் புதெயட்ட கிருளபூ தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, சுசில் பிரேம ஜயந்த, ரஞ்சித் சியம்பலா பிட்டிய, ராஜித சேனாரத்ன உட்பட பெருமளவு அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்;

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி முதற் தடவையாக நடாத்தப்பட்டபோது தற்போது நடைபெறும் அபிவிருத்திகள் வெறும் திட்டங்களாக மட்டுமே இருந்தன. எதிர்கால அபிவிருத்தி பற்றி அதன் மூலம் வெளிப்படுத்தினோம்.

குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம், மேல் கொத்மலை மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது இயங்கிவரும் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் என்பன ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

மூன்று வருட காலங்களில் நாம் வடக்கு கிழக்கையும் மீட்டு தற்போது நான்காவது வருடத்தில் ஒன்றிணைந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பியுள்ளோம்.

புதெயட கிருளபூ கண்காட்சி மூலம் அரசாங்கத்தின் எதிர்கால திட்டத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறோம். இக் கண்காட்சியானது எமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைந்து வருகிறது.

கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த புதெயட்ட கிருளபூ கண்காட்சி தற்போது கண்டியில் நடாத்தப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஏனைய முக்கிய நகரங்களிலும் இக் கண்காட்சி நடத்தப்படுமென நம்புகிறேன்.

பல்வேறு சவால்கள், அழுத்தங்கள், தடைகளுக்கு மத்தியில் நாம் பொருளாதார அபிவிருத்தியில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் அகப்பட்ட போதும் நாம் பாதிப்பின்றி தொடர்ந்தும் தலைதூக்கி பயணிக்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய;

இம்முறை வெற்றியுணர்வுடன் கூடியதாக புதெயட்ட கிருளபூ நடைபெறுகிறது. மூன்று தசாப்த காலம் நாட்டைப் பீடித்திருந்த அந்தகாரம் விலகி ஒளிபிறந்துள்ளது. 2008ம் ஆண்டு கொழும்பில் நடாத்தப்பட்ட கண்காட்சியில் எமது புதிய நிர்மாணிப்புகள் பல வெளிப்பட்டன. இம்முறை அதனை விட மேலானதாக கண்டியில் இக் கண்காட்சி நடாத்தப்படுகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதெயட்ட கிருளபூ கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அமைச்சர்க ளுடன் முக்கியமான கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலையும் இரவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்காட்சியைக் கண்டு களிக்க வருகை தந்தனர். இக் கண்காட்சியை எதிர்வரும் 10ம் திகதி வரை மக்கள் பார்வையிட முடியும்




அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

சபை அமர்வு பெப். 23க்கு ஒத்திவைப்பு


அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரேரணை நேற்று (05) பாராளுமன்றத்தில் 87 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், ஜே. வி. பி. சபையில் இருக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன், செல்லச்சாமி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். ஐ. தே. க. அவசரகாலச் சட்டத்தை எதிர்ப்பதாக ஜோசப் மைக்கல் பெரேரா எம். பி. சபையில் அறிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்றுக் காலை விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும் ஆரம்பமான விவாதம் மாலை நான்கு 45 வரை நீடித்தது. சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விவாதத்தை நிறைவு செய்துவைத்து உரையாற்றினார்.

அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் வெற்றியை மலினப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் குளறுபடி நடந்திருக்குமானால் தேர்தல் ஆணையாளரிடம் சென்று முறையிட்டுக்கொள்ளட்டும்.

ஜனாதிபதியின் தேர்தல் வெற்றி மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோருக்குக் கன்ன த்தில் அறைந்துள்ளதுபீ என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இராணுவச் சட்டதிட்டங்களை மீறி சதிசெய்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்து விட்டு ஜனாதிபதி வேட்பாளரெனக் கூறித் தப்பிக்கொள்ள முடியாது.

எப்படியும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் கள் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். வாக்களிப்பின் போது ஜே.வி.பி மற்றும் மு.கா. உறுப்பினர்கள் சபை யில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

தமிழ்க் கூட்டமைப்புடன் சேர்ந்து மனோ கணேசன் எம்.எஸ். செல்லச்சாமி ஆகியோரும் எதிராக வாக்களித்தனர். சபை அமர்வு இம் மாதம் 23ம் திகதி வரை ஒத்திவைக்கப் படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.


சகல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்

அத்தியாவசிய சேவையை கருத்திற் கொண்டு அரசாங்கம் முடிவு


தேர்தல்களின் போது சுகாதாரத்துறை யிலுள்ள சுமார் ஒரு லட்சத்து 50,000 ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களி ப்பதற்கு சந்தர்ப்பம்வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக கருத்திற் கொண்டு சகல மட்டத்திலுமுள்ள ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர் ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச் சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல், 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல், 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் 1989 ஆம் ஆண்டு மார்ச் திருத்தப்பட்ட 262 ஆம் சரத்தில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரித்துடை யோர் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இருப்பினும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுகின்ற சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அரசாங்க மற்றும் மாகாண ரீதியில் இருக்கும் சுமார் 1,50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களிப்பு நிலையத்தில் கடமைக்கு செல்வதால் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் பெருந்தொகையானோருக்கு வாக்களிக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.

சுகாதாரத்துறையிலுள்ள டாக்டர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், உட்பட ஊழியர்கள் சுழற்சி முறையில் சேவை செய்வதில் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. வாக்களிப்பதற்காக 4 மணி நேரம் சந்தர் ப்பம் வழங்கப்பட்டாலும், நோயாளிகளை பராமரிக்கும் சேவையிலுள்ளவர்களுக்கு இது சாத்தியப்படுவதில்லை. பெரும் சிக்கல்களை தோற்றுவிக்கும்.

இந்த விடயம் தொடர்பாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு ஆலோசனையை சமர்ப்பித்திருந்தார்.

மத்திய அரசின் கீழுள்ள, மாகாண அரசுகளின் கீழுள்ள, நிரந்தர, சமயா சமய, பதில் ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், டாக்டர்கள், தாதியர்கள் உட்பட சகல தரத்திலான சுகாதாரத்துறை ஊழியர்களும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக