6 பிப்ரவரி, 2010


ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்


மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடெவ்வைச் சந்திக்கும் ஜனாதிபதி அந்நாட்டின் கடன் திட்டம் ஒன்று குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைகிறது.

பிரத்தியேக விமானம் ஒன்றில் இவர் இன்று காலை பயணித்ததாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன



அரசியல் தீர்வு வேண்டும் என்பதைத் தமிழ் மக்கள் தேர்தல் மூலம் உணர்த்திவிட்டனர் : அரியநேத்திரன்





சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்றை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள போதிலும் வன்முறைகளும் அதேபோல் உயிர் அச்சுறுத்தல்களும் குறைந்தபாடில்லை. தற்போது எமது குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எமது உறுப்பினர் தோமஸ் வில்லியம் உட்பட எனக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

எம்மைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் மட்டக்களப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்தே தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எமது உயிர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் அசம்பாவிதங்களும் ஏற்படுமிடத்து அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே ஏற்க வேண்டும்.

இன்று கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தேன். இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அப்பட்டமான பொய்யைக் கூறினார்.

ஆனாலும் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனை ஒப்புவிக்க முடியும். வேண்டுமானால் கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வர முடியுமா என்று கேட்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் தனித்துவமான இனம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். எனவே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தமக்கு தரப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளனர்.

இந்த யதார்த்தபூர்வ உண்மைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கேற்றவாறு செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தீர்மானத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி உண்மையான தமிழ் தலைமைகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

62 வருட கால சுதந்திர வரலாற்றில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தனை காலகட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசியதை விட அவசர காலச் சட்டம் குறித்த பேச்சுக்களே அதிகம் என்று கூறலாம்.

தற்போது புலிகள் இல்லை. புலிகளை அழித்துக் கட்டிவிட்டதாகக் கூறுகின்ற அரசாங்கம், அதற்காக ஏற்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை மாத்திரம் முடிவக்குக் கொண்டு வர முடியாதிருக்கின்றது.

எனவே அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தற்போது அமுலில் இருக்கின்ற அவசர காலச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்ற அதேவேளை அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு சூழலில் பொதுத் தேர்தலை நடத்தி அதில் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய நீதியான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.




எதிரணியை அடக்கவே அவசரகாலச் சட்டம் : லக்ஷ்மன் செனவிரத்ன


பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அவசர காலச் சட்டம் தேவையெனில் ஏன் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்? வடபகுதியில் மட்டும் அதை அமுல்படுத்தலாமே?" என ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன கேள்வி எழுப்பினார்.

அவசர காலச் சட்டத்தை அரசாங்கம் எதிரணிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகிறது. எனவே ஐ.தே.கட்சி இதனை எதிர்க்கின்றதென்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. ஏ9 பாதை திறக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலும் முடிந்து விட்டது. பாதுகாப்பு செயலாளர் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று உறுதியுடன் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன், எதற்கு அவசர காலச் சட்டம் தேவைப்படுகிறது? ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் லங்கா பத்திரிகை தடை செய்யப்பட்டது.

எதிரணி ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவையெல்லாம் அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. பொதுத் தேர்தலில் எமது ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கவே அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். உண்மையை எழுத முடியாது தடுக்கப்படுகிறது. அரசாங்கத்தைச் சார்ந்தோர் பகிரங்கமாக எமது ஆதரவாளர்களை தாக்குகின்றனர். துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறானவர்களை ஏன் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்ய முடியாது?

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத் தரப்பில் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவசர காலச் சட்டம் தேவையென பிரதமர் சொல்கிறார்.

அப்படியானால் வடபகுதிக்கு மட்டும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தலாமே? ஏன் நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்?

நாட்டில் சட்டம் செத்துவிட்டது. ஐ.தே.கட்சியை சார்ந்த பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதுள்ளது. தேர்தல் வெற்றியால் மஹியங்கனை நகரில் எதிர்க் கட்சியினர் மீது அடக்கு முறை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனவே ஐ.தே.கட்சி அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவினை வழங்காது. பொலிசாருக்கு தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. ஹெல உறுமய பௌத்த குருமார் இன்றைய வன்முறைகள் தொடர்பாக என்ன சொல்கின்றனர்?

ஏன் தர்மத்திற்கு மாறுபட்ட வன்முறைகளுக்கு இடமளிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.




ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்



வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் கண்டுள்ள போதிலும் மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்பி சலுகையைஞ்கு தக்க வைத்துக் கொள்வதற்கு அல்லது அதனை மீளப் பெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகன இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ராஜதந்திரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் (ஜீ.எஸ்.பி.) கீழ் 16 வறிய நாடுகள் வர்த்தக சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளன. இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக மற்றும் மனித உரிமை பேணல் போன்ற விடயங்களில் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர்.

உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் புதிய விதிகளுக்கேற்ப சீராக்கல்களை மேற்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் இலங்கையும் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் நடந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலங்கை வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கென எடுக்கும் முயற்சிகளுக்கு தாங்களும் உதவ தயாராக இருப்பதாக மேற்படி இராஜதந்திரி தெரிவித்தார்.

இலங்கையின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பல வருடங்களாக யுத்தம் நடத்திய முறை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களை படுகொலை செய்தமை, உதவிப்பணியாளர்களை கொலை செய்தமை, ஆகியன உட்பட அரசாங்க படைகள் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

ஐரேப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளிலிருந்து சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம், சித்திரவதைக்கு எதிரான சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம் ஆகிய ஐக்கியநாடுகள் சாசனங்கள் மூன்றினை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக தெதியவந்துள்ளது.

அதேவேளை, விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கை எவ்வளவோ திருந்தி விட்டதால் வரிச்சலுகையை நிறுத்துவதற்கான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தாம் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "வரிச்சலுகை நிறுத்தம் அமுல் செய்யப்படுவதை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறுத்த முடியும். ஆனால் அதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிபார்சும், அங்கத்துவ நாடுகளினது இணக்கமும் தேவை" என்று கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை மனித உரிமை பேணல் விடயத்தில் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை என்பஐ தற்போதைய அபிப்பிராயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஓரிரு தினங்களில் வழக்குத் தாக்கல்: .தே.மு





தேர்தல் முடிவுகளை தாம் முற்றாக பகிஷ்கரிப்பதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவத்துள்ளனர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இத் தகவலை உறுதிப்படுத்தினர்.

இவ்விடயம் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை நாம் நியமித்துள்ளோம். உரிய முறையில் தகவல்களை திரட்டி, ஆதாரத்துடன் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துவருகிறார்கள். இன்னும் சில தினங்களில் வழக்கு தொடரலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அதேவேளை, இரத்தினபுரியில் வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்கு தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்றுள்ளதாக திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக