27 டிசம்பர், 2010

பெளத்த கொடிக்குக் கொடுக்கும் கெளரவம் ஏனைய மதக் கொடிகளுக்கும் வழங்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு

பெளத்த கொடிக்கு நாட்டில் கொடுக்கப்படும் அதே அந்தஸ்தையும் கெளரவத்தையும் ஏனைய மதங்களின் கொடிகளுக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான இந்துக்களின் நந்திக்கொடி, இஸ்லாமியரின் பிறைக்கொடி, கத்தோலிக்கர்களின் புனித பாப்பரசருக்கான வெள்ளை – மஞ்சள் கொடி ஆகியவற்றிற்கும் பெளத்த கொடிக்கு கிடைத்திருக்கும் அதே மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து சகல மதக் கொடிகளையும் ஜனரஞ்சனப்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இன்று பத்து பன்னிரண்டு வயதைக் கொண்ட எங்கள் நாட்டின் பிள்ளைச் செல்வங்கள் 2020 ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பான பிரஜைகளாகி விடுவார்கள். அவர்களுக்கு நீஇப்போது இருந்தே பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் அவர்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற வேண்டும் என்ற நற்பண்பை கற்றுக் கொடுப்பது என்னுடைய நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள சகல இன, மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் நாட்டுப்பற்றுடன் துளிர் விட்டு வளரும் இதேவேளையில் அவர்கள் மனதில் மற்ற மதங்களை கெளரவிக்கும் நற்பண்பும் குடிகொள்ளும். இதன் மூலம், நாட்டில் உண்மையான இன ஐக்கியத்தையும், மதங்களிடையே பரஸ்பரம் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தி இலங்கையில் என்றென்றும் சமாதான வெண்புறா ஆகாயத்தில் அச்சுறுத்தல் எதுவுமின்றி கம்பீரமாக பறந்து செல்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் வேதனை வடுக்கள் இந்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும், இப்போது நிலைத்து இருக்கின்றது என்ற உண்மையை தாம் மறக்கத் தயார் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வேதனை வடுக்கள் இப்போது உள்ள வயது வந்தவர்களின் மனதிலிருந்து முற்றாக அகன்று விடுவதற்கு நிச்சயம் சில காலம் எடுக்கும் என்று கூறினார்.

எனவே, நாம் நாட்டின் தேசிய ஐக்கியத்தையும், பல்வேறு மதங்களிடையே உண்மையான புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் எமது சிறுவர்கள் மத்தியில் இப்போது இருந்தே வளர்ப்பது அவசியம் என்றும், அதன் மூலம் இன்னும் 9, 10 வருடங்களில் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள்.

எங்கள் அனைவருக்கும் சம உரிமையும், சமவாய்ப்பும், சகல துறைகளிலும் இருக்கின்றது என்ற உணர்வு இந்த பிள்ளைகளின் அடிமனதில் நிரந்தரமாக குடிகொண்டுவிடும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஒருவர் தன்னை இந்தியன் என்று கூறுவதைப் போல் நாமும் இனி இலங்கையர் என்று மார்பைத்தட்டி அறிமுகம் செய்யும் நாள் வரை நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கை மக்களும், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்வதற்கு பதில், நான் ஒரு இலங்கையன் என்று பெருமையோடு தன்னை அறிமுகம் செய்யும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலட்சியக்கனவாகும். அந்தக் கனவு நிச்சயம் நனவாகிவிடும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பெற்றோர், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள கற்றறிந்த பெரியோர்கள் இந்த நற்பண்புகளை எமது பிள்ளைச் செல்வங்களின் மனதில் பதியச் செய்ய வேண்டும். இறைவனின் முன்னால் எல்லோரும் சமமானவர்கள். எல்லாம்வல்ல இறைவன் ஒருவரின் இனத்தையோ, மதத்தையோ பார்த்து மக்களை நேசித்து, அவர்களுக்கு தன்னுடைய அருளாசியை தெரிவிப்பது இல்லை.

ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை தெரிந்து கொள்வதிலேயே, இறைவன் தனது அவதானத்தை செலுத்துகிறார் என்ற உண்மையை பிள்ளைச் செல்வங்களின் மனதில் இந்த பெரியவர்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய வகையில், அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இவ்விதம் மற்ற இனங்களையும், மதங்களையும் மதித்து அவற்றிற்கு மரியாதை செலுத்தும் இளம் சந்ததியினர் 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் உருவாகினால், இலங்கையில் வன்முறைகளோ, கிளர்ச்சிகளோ, உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்காது. இனக்கலவரங்கள் வளருவதற்கும் எவ்வித அடித்தளமும் அமைந்திருக்காது.

அதனால், அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் இளம் சந்ததியினருக்கு நாட்டை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைச் செய்து தெற்காசியாவில் தேனும், பாலும் ஊற்றெடுக்கும் பொன் விளையும் ஒரு சொர்க்கப் பூமியாக மாற்றிவிட முடியும் என்று நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக