15 நவம்பர், 2010

யுத்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே: தயா மாஸ்டர்

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு சாட்சியமளித்த தயா மாஸ்டர் மேலும் கூறியதாவது :

நான் ஒரு காலத்தில் புலிகளின் ஊடகத்துறையில் இணைப்பாளராகச் செயற்பட்டேன். புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் கீழே இந்த ஊடகப் பிரிவு வருகின்றது. புலிகள் அமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அந்த அமைப்பை விட்டு நான் வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். காரணம் பேச்சுவார்த்தைகளை முறிப்பதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் மக்களின் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது என நான் உணர்ந்திருந்தேன். அதனால்தான் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தேன்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது எண்ணிலடங்காத மக்கள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கு மத்தியிலும் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்தனர். எனது குடும்பமும் நானும் பல தடவைகள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்டு வந்தோம். 2009 ஜனவரியில் போர் எங்கு நடைபெறும் என்ற வரையறை இல்லாமலிருந்தது. அதன் பரிமாணம் விரிவடைந்தது. மக்கள் அங்கலாய்த்தவர்களாகக் காணப்பட்டனர். உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்தமையே உண்மை நிலைமையாகும். அந்தக் காலகட்டங்கள் வாழ்வில் மறக்கமுடியாதவை. தப்புவதற்கு முயற்சித்த பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அந்தச் சந்தர்ப்பங்களை நினைத்து வருந்துகிறேன்.

எப்படியோ போன உயிர்களைத் திருப்பிப்பெற முடியாது. ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தோம்.ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக