28 அக்டோபர், 2010

2000 இரத்தினக் கற்களை வயிற்றில் கடத்திய இலங்கையர் சென்னையில் கைது

இரண்டாயிரம் நவரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கி கடத்திச் சென்ற இலங்கை நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமது சபீக் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை சோதனை செய்துள்ளனர். மேலும் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவருக்கு ஸ்கான் செய்யப்பட்டது. அதில் வயிற்றில் நவரத்தின கற்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து அவரிடம் இருந்து நவரத்தின கற்கள் மீற்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் நவரத்தின கற்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட நவரத்தின கற்களின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாக்கிட் தெரிவித்தார். நவரத்தின கற்களை கடத்தி வர தனக்கு இந்திய மதிப்பின்படி 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சிலர் கூறியதாக முகமது சபீக் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முகமது சபீக் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என இந்திய செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக