3 பிப்ரவரி, 2010

தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா முறைப்பாடு-


எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை இன்று சந்தித்துள்ளார். இதன்போது அன்னம் சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்டு நிராகரிக்கப்பட்டவையென இரத்தினபுரியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வாக்குச்சீட்டுக்கள் தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இன்றைய ஊடக சந்திப்பில் பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததாக கூறியுள்ளார்.

வவுனியாவில் தனது மனைவியையும் அவரது தாய், சகோதரர் ஆகியோரை படுகொலை செய்தநபர் கைது-

வவுனியா நெலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் இரவு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் தெரிவிக்கின்றனர். கொலைச் சந்தேகநபர் தனது மனைவியின் தாயார், மனைவியின் சகோதரர் மற்றும் தனது மனைவி ஆகியோரை இரும்புக் கம்பியினால் தாக்கிப் படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது தாக்குதலின்போது அவரது மனைவியின் சகோதரியொருவரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கூட்டமொன்றினை நடத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப்பேரணி மற்றும் கூட்டத்தினை ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் முக்கியமாக ஜே.வி.பியினரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டது.

கம்பளை விகாராதிபதி உள்ளிட்ட இருவர் கொலைச் சந்கேதநபர் கைது-


கம்பளை விகாரை நலன்புரி விகாராபதிமீது குண்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவரை நேற்றுக் கைதுசெய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர், காலைவேளையில், வாகனம் ஒன்றில் வந்த சிலர் விகாரைமீது குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 73வயதான விகாராதிபதியும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த கம்பளை பொலிஸார், நேற்று களுத்துறை பிரதேசத்தில் மறைந்து திரிந்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக மேலும் அரசியல்வாதி ஒருவரையும் மற்றும் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படும் மேலும் சில இராணுவ வீரர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்-

சர்வதேச மன்னிப்புச்சபை- ஊடகங்கள்மீது பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள்மீது கடந்தவாரம் நடைபெற்றுமுடிந்த தேர்தலின்பின்னர் பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் நிலை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் வலய பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரச ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட 56 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

இறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்பு-

குருநாகல் மாவட்டம் இறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகலில் மீட்கப்பட்டதாக இறக்குவானைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கொட்டகவெல கலஇட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 29வயதுடைய இந்திக்க என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் நேற்று முன்தினம் சென்றிருந்த குறித்த இளைஞர் வீடு திரும்பாததையடுத்து குடும்பத்தினர் பொலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக