17 ஜனவரி, 2010

தமிழ்க் கூடட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் துப்பாக்கிச்சூட்டில் காயம்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தனின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுபிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் பொறுப்பாளர் கேணல் ராம் கைதாகவில்லை

-இராணுவப் பேச்சாளர்- புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் ராம் இதுவரை கைதாகவில்லை என இராணுப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கேணல் ராம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஜெனரல் சரத்பொன்சேகா தரப்பினர் வெளியிட்டுவரும் பிரச்சாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மறுப்பறிக்கையும் விடுத்துள்ளார். கேணல் ராம் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் எனவும், இதனால் தேர்தலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று கூறியுள்ளது. குறித்த புலி பொறுப்பாளர் கிழக்கு காட்டுப் பகுதியில் மறைந்திருக்கக் கூடுமென இராணுவத்தினர் சந்தேகித்துள்ளனர்.

மாத்தளை நகரசபை உறுப்பினரின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு-

மாத்தளை நகரசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின்மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் விடுப்பதற்காக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை பொலீசார் ஆரம்பித்துள்ளனர். இதனிடையே கேகாலை மாவனல்ல பகுதியில் நேற்றுப்பிற்பகல் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால் அமைதியின்னை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கற்களும் தடிகளும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது தமது வீட்டுக் கூரைக்கு சேதமேற்பட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல்வாதியொருவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளர்.

ஆளும்கட்சி அதிகளவில் அரச சொத்து துஸ்பிரயோகம்-

பாக்கியசோதி சரவணமுத்து- ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகளவில் அரசாங்க சொத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். அரச ஊடகங்கள் மிகவும் மோசமான முறையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசஅதிகாரிகள், கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஆகியன அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது சொத்துக்கள் தனிப்பட்ட அரசியல்கட்சிகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது எனவும், பொதுமக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 17வது திருத்தச் சட்டமூலம் அமுல்படுத்தப்படும் வரையில் சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்துவதில் சிக்கல்நிலை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தாண்டிக்குளம் பஸ் விபத்தில் இருவர் பலி, 13பேர் காயம்-

வவுனியா தாண்டிக்குளத்தை அண்மித்துள்ள கொக்குவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த பஸ் விபத்து இன்றுஅதிகாலை 1மணியளவில் இடம்பெற்றதாக வவுனியா பொலீசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியைவிட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் குறித்த பஸ்சின் சாரதியும், பயணியொருவருமே உயிரிழந்துள்ளனர். இதன்போது மேலும் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக