4 ஜனவரி, 2010

ததேகூ இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை:கூட்டம் தொடர்கிறது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் கூடியுள்ள போதிலும் மாலை வரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. இருப்பினும் கூட்டம் தொடர்ந்தும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம், சந்திரநேரு சந்திரகாந்தன் (தற்போது லண்டன்), எஸ்.ஜெயானந்தமூர்த்தி (தற்போது லண்டன்) த.கனகசபை (தற்போது இந்தியா ), சதாசிவம் கனகரத்தினம் (தடுப்புக் காவல்) தவிர்ந்த ஏனைய 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு எம்.கே. சிவாஜிலிங்கம்,சிவநாதன் கிஷோர் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும சிவாஜிலிங்கம் தவிர்ந்த ஏனைய இருவரும் கலந்து கொண்டனர்.

இன்று காலை 10 .30 முதல் பிற்பகல் 2.00 மணி வரை பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக தலைவர் இரா.சம்பந்தன் விளக்கிக் கூறியதாகத் தெரிய வருகின்றது.

இத்தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வந்த கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்களின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள அதேவேளை, தமிழ் வேட்பாளரரையும் ஆதரிப்பதில்லை என்று தீர்மானித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இன்று மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.

ஆட்சி மாற்றமா? தேர்தல் பகிஷ்கரிப்பா? ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.