ஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதுமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த அரசசார்பற்ற 4 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அரசசார்பற்ற 4 அமைப்புகளுக்கு இதற்கான அனுமதியை தேர்தல் திணைக்களம் வழங்கியுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த தலா இரு பிரதிநிதிகள் வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்புஇ தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் என்பன வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான பிரசார அமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு கட்டமைப்பு என்பன வெளியிலிருந்து தேர்தலை அவதானிக்கும். தேர்தல் திணைக்கள ஆலோசகர் பந்துல குலதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அவதானிகளாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொது நலவாய நாடுகளை சேர்ந்தோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று முன்னர் இலங்கை தெரிவித்திருந்தது. இதேவேளை, 2008 வாக்களர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று குலதுங்க கூறியுள்ளார்.