10 டிசம்பர், 2009

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் அமைதி ஊர்வலம்







வழக்கு விசாரணைகளின்றி நீண்ட நாட்களாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி, வவுனியாவில் அமைதிப் பேரணி நடைபெற்றுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டார்கள். தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி வவுனியா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தப் பேரணியை அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் எதிரே கூடிய இவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தார்கள். தமது கோரிக்கையை வெளிப்படுத்தும் மகஜர் ஒன்றினை மனித உரிமைகள் ஆணையக அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்தனர்.அதன் பின்னர் வவுனியா புகையிரதநிலைய வீதிவழியாக குருமண்காட்டுச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து மன்னார் வீதிவழியாக வவுனியா அரச செயலகத்திற்குச் சென்று பேரணி முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் வி.சகாதேவனும் கலந்து கொண்டார்.விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்தைக்கோரும் மகஜர் ஒன்று வவுனியா அரச செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சருடன் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், இக்கைதிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களை பிணையில் விடவும் அல்லது நிரந்தரமாக விடுதலை செய்வதற்கும் நீதி அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.
இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக