10 டிசம்பர், 2009

வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்திய சிறையதிகாரி கைது

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்திய சிறைச்சாலை அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சிறைச்சாலை அதிகாரி இன்றுமுற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலையின் அதிகாரியொருவர் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த அதிகாரி வெலிக்கடைப் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது பொலீசார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இளைஞர் பலி,


பொலீஸ் அதிகாரியை இடம்மாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்- புத்தளம் மாவட்டம் முந்தல் மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தினால் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி பிரதேசத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். தனியார் சொகுசு பஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட முந்தல் பொலீஸ் அதிகாரி, சொகுசு பஸ் சாரதிக்கு சார்பாக விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், குறித்த பொலீஸ் அதிகாரியை இடம்மாற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து ஸ்தலத்திற்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பிலான வழக்கு
விசாரணை குற்றப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு- சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணையை குற்றப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று கல்கிசை நீதவான் ஹர்ச சேதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். அத்துடன் கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் கையடக்கத் தொலைபேசியை களவாடிய சந்கேதநபரான ஆட்டோ சாரதியொருவரை இம்மாதம் 24ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10ஆயிரம் ரூபாவினால் சம்பள உயர்வு வழங்குவேன்-ஜெனரல் சரத்பொன்சேகா- தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10ஆயிரம் ரூபாவினால் சம்பள உயர்வு வழங்குவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா உறுதியளித்துள்ளார். இன்று எதிர்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். அரச சேவையாளர்கள் மட்டுமன்றி தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்வதற்கு அவர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 40வருடங்களாக அரச சேவையில் அனுபவமுள்ளவன் என்றவகையில் அரச ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனுபவித்துவரும் இன்னல்களை தான் நன்கு அறிந்தவரென்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறுகிறது
-அகில இலங்கை ஒன்றிணைந்த புகையிரத பொது ஊழியர்கள் சங்கம்- தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அகில இலங்கை ஒன்றிணைந்த புகையிரத பொது ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எதிர்வரும் ஆண்டும் ஜனவரியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் பதவியுயர்வு வழங்குவது இடம்பெற்று வருவதாக ஒன்றிணைந்த புகையிரத பொது ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சுமதிபால மானவடு தெரிவித்துள்ளார். அரசின் இவ்வாறான நடவடிக்கைகளை தேர்தல் சட்ட விதிகளை மீறுவதாகவே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்க ஆதரவு வழங்க பதிவு செய்யப்பட்டுள்ள பிரதி வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்க ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதி வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அந்த சங்கம் இத்தீர்மானத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகம் நிறைந்த சுதந்திரமான வாழ்க்கையைப் பெற்றுத்தந்தமையாலேயே தாம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் இன்று சர்வதேச ரீதியில் பிரசித்து பெறுகின்றமைக்கு முப்பது வருடகாலமாக நிலவிவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதியே காரணமென்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்-
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்- புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென ஜெனரல் சரத்பொன்சேகாவை பொது வேட்பாளராக ஆதரித்துள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. முன்னாள் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகா பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்ததன் பின்னர் அவரை ஆதரிக்கும் கட்சிகள் இணைந்து இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தன. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய ஜே.விபியின் எம்.பி அநுரகுமார திசாநாயக்க, நாட்டில் நடைபெற்றுவரும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவுகட்டி தாய்நாட்டைக் காக்கவே ஜெனரல் சரத்பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா 30வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அந்நடவடிக்கையின்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்த வெற்றிக்கு பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பலர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இவ்வாறு பெறப்பட்ட வெற்றியினை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை கோருவது எந்தவகையில் நியாயம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.


அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்-

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்றுடன் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து நேற்றையதினம் முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவசரகால சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 26தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தம்மை விடுதலை செய்யும்வரை இப்போராட்டம் தொடருமென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கூறியுள்ளனர்.

மருதானையில் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள்மீது தாக்குதல்
- கொழும்பு மருதானைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4மணியளவில் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமது ஆதரவாளர்கள்மீது வானில் வந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அத்தனகல, கொழும்பு 07, நாரெகென்பிட்டிய, தும்புள்ள உள்ளிட்ட பிரதேசங்களிலும் இவ்வாறான தாக்குதல்கள் தமது ஆதரவாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக