10 டிசம்பர், 2009

தமிழர்கள் கெளரவம், சமவாய்ப்புடன் வாழ அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வே தேவை-றொபேட் ஓ பிளேக்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அவர் ஊடகவியலாளர்களை கொழும்பில் நேற்றுச் சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாடு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:இலங்கைப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்படவேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் இலங்கையர்கள் அனைவரும் ஜனநாயக முன்னெடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்குபற்ற முடியும்.
குறிப்பாக வட மாகாணத்தில் ஜனநாயகம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கு அதிகாரப் பகிர்வின் மூலமான தீர்வு அவசியமானதாகின்றது. இலங்கைப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்படும் பட்சத்திலேயே தமிழர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் கௌரவத்துடனும், சம வாய்ப்புகளுடனும் வாழ்கின்றமையை உறுதிப்படுத்த முடியும். அரசும் எதிர்க்கட்சிகளும் அதிகாரப் பகிர்வின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படுவார்களென அமெரிக்கா நம்புகின்றது.

ஜனாதிபதித் தேர்தல்இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் ஜனநாயக விழுமிய பண்புகளுக்கு அமையவும் நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது. இத் தேர்தலின் பின்னர் அதிகாரப் பகிர்வின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முன்னெடுப்புகள் காத்திரமான முறையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

அமெரிக்கா ஏனைய நாடுகளின் தேர்தல்களில் எந்தத் தரப்பு வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை. ஆனால், இத்தேர்தல் நீதியாகவும், நேர்மையாகவும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாகவும் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா பூரண ஆதரவு வழங்கும். இத்தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் ஆரோக்கியமான நிலையிலேயே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மெனிக் பாமுக்கு விஜயம்யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை அரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கின்றது. இந்த அகதிகளின் நடமாடும் சுதந்திரத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நான் மெனிக்பாம் முகாமிற்குச் செவ்வாய்க்கிழமை காலை சென்றிருந்தேன். அங்கு ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அவதானித்தேன். அங்குள்ள மக்களுக்கு விரும்பிய இடத்திற்குச் சென்றுவர பெரிய அளவில் சுதந்திரம் வழங்கப்பட்டமையைக் கண்டு மகிழ்ந்தேன்.
மன்னாரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் சிலரையும் சந்தித்தேன். அங்கு சில இடங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும். ஊடகவியலாளர்கள் எவருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும்.
மக்கள் சுதந்திரமாக வேறுபட்ட கருத்துக்களைக் கூட வெளிப்படையாகப் பேசக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும்.மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய சூழல் உருவாகவேண்டும்.அண்மையில் அமெரிக்கா விஜயம் செய்த முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகாவை அங்கு அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினர் யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த முயன்றமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த றொபட் பிளேக், அது தமது அமைச்சு சம்பந்தப்பட்ட விடயம் இல்லை என்பதால் கருத்துக்கூறமுடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக