தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்களே-
பி.அரியநேந்திரன் எம்.பி- தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பிட்ட கருத்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கின்ற தீhமானங்களை அதனை ஒரு முடிவாக சில ஊடகங்கள் மாற்றுவதுன் காரணத்தினால் தமிழ்க்கூட்டமைப்பு கவலையடைகின்றது. தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லையென்பதில் தெளிவாக இருக்கிறோம். தேர்தல் தொடர்பிலான முடிவினை தமிழ்க் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளது. அந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும்வரை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயென தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
இன்றையதினம் முற்பகல் முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இந்த வருடம் மேமாதத்தில் வன்னியில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இறுதிப் போர் இடம்பெற்ற பகுதி புதுமாத்தளன் பகுதியாகும். இப்பிரதேசத்தில் படையினருக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வினைத் தொடர்ந்து இறுதிப்போரில் பங்கு பற்றியிருந்த இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடலையும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். அத்துடன் மன்னாரின், மடு தேவாலயத்திற்கும் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் அகதிகள் முகாமிற்கும் ஜனாதிபதி விஜயம் செய்து நிலiமைகளை அவதானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை-
நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தற்சமயம் நாடளாவிய ரீதியாக 670அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் அனைவரது வழக்குகளும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் 46கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி மேலும் தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களின்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்-
எல்லைகளற்ற ஊடக அமைப்பு- அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதை அரசியல் கட்சிகளும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் உறுதிசெய்ய வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்தவார இறுதியில் நடைபெற்ற எதிர்க்கட்சியொன்றின் கூட்டத்தின்போது செய்திகளைச் சேகரிக்கச் சென்ற அரச ஊடகவியலாளர்கள்மீது நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்கு இந்தத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றபோதிலும் ஊடக சுதந்திரம் இல்லாவிட்டால் அவற்றை ஜனநாயகம் மிக்கதாக கருத முடியாதென எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளோம்-
ஜே.வி.பி- இலங்கை அரசியலில் காணப்படும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திற்காகவே பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் பல்வேறு விடயங்களில் தமது கட்சியினருக்கு முரண்பாடுகள் பல காணப்பட்டாலும் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே பொதுவேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துப்போவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியிலுள்ள அரசாங்கம் அரச ஊடகங்களையும் அரச சொத்துக்களையும், அரச ஊழியர்களையும் சட்டவிரோதமாக தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேசப்பற்று பற்றி பேசும் அரசாங்கம் சம்பூரில் பரம்பரையாக வாழ்ந்துவந்த தமிழ்மக்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களை திருமலையிலுள்ள ஐந்து முகாம்களில் தங்கவைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அவர்களது நிலங்களை இந்திய நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும்-மனோ கணேசன் எம்.பி-
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். வலிகாமம் வடக்கிலும் திருமலை சம்பூரிலும் அமைக்கப்ட்டுள்ள அதி உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேநேரம் யாழ்ப்பாணம் அனுராதபுரம், நீர்கொழும்பு, கண்டி சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். பலாலிவீதி தபால்கட்டைச் சந்தியிலிருந்து படைவீரரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பலாலிவீதி தபால்கட்டைச் சந்திப்பகுதியிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்றுகாலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் இருந்த அதிகாலையில் குறித்த பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் அதனைத் தொடர்ந்து காலையில் சடலத்தைக் கண்ட பொதுமக்கள் பொலீசாருக்கு தகவல் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த பொலீசார் சடலத்தினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மீட்கப்பட்ட சடலம் இராணுவ சீருடையில் காணப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக