தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள் -அரசிடம் மனோ கணேசன் கோரிக்கை
யாழ். வலி-வடக்கிலும், திருகோணமலை சம்பூரிலும் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி ஆகிய சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவை இரண்டு விடயங்களையும் உடனடியாக அரசாங்கம் செய்தாகவேண்டும்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவருமான மனோ கணேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் குழுவின் செயலாளர் ஜயலத் ஜயவர்தன எம்பி, முஜிபர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து மனோ கணேசன் கலந்து கொண்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,இன்று உயர் பாதுகாப்பு வலயங்கள் எதற்கு? "இன்று யாழ்ப்பாணத்தில் மழைபெய்தால் கொழும்பிலே சிலர் குடைபிடிக்கிறார்கள். யாழ்ப்பாண மக்கள் மழையில் நனைந்தால் இங்கே சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. இத்தகைய விசித்திரங்களுக்கு காரணம் ஒன்றும் பரம இரகசியம் கிடையாது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலே தமிழ் மக்களின் வாக்குகளை வாங்குவதற்கு தென்னிலங்கையிலே போட்டாபோட்டி நடந்து கொண்டிருக்கின்றது. நான் இன்று யாழ்ப்பாணம் சென்று அங்கு நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளேன்.
எனக்கு அடிக்கடி யாழ்ப்பாணம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற மக்களுக்காக நாங்கள் இடைவிடாது குரல்கொடுத்துப் போராடி வருகின்றோம். எனவே நான் யாழ்ப்பாணத்திலே ஒரு அரசியல் விருந்தினர் அல்லர். யாழ் மக்களின் உணர்வுகள் எங்கள் உயிருடன் எப்பொழுதும் கலந்திருக்கின்றது.
போர் நடைபெறும் பொழுது விடுதலைபுலிகளின் பீரங்கி தாக்குதல் எல்லைக்குள் இராணுவ முகாம்கள் இருந்த காரணங்களை காட்டி அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலங்களை அமைத்தது. இன்று போர் இல்லை. விடுதலை புலிகளின் பீரங்கிகளும் இல்லை.
எனவே எந்த அடிப்படையில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என இந்த அரசாங்கத்தை நான் கேட்கின்றேன். வலிகாமம் வடக்கிலே சுமார் 3800 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
எங்கள் மக்களின் வீடு, வாசல், நிலம் ஆகியவை மாத்திரம் அல்ல, எங்கள் இனத்தின் வரலாறும் சுற்றி வளைக்கப்பட்டிருகின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் அதேபோல் இன்று இன்னொரு எரியும் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையாகும்.
இந்த ஊடக சந்திப்பு நடைபெறும் இந்நேரத்திலே யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி ஆகிய சிறைச்சாலைகளிலே தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாநோன்பை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். போர் முடிந்து நாடு விடுதலை பெற்றுவிட்டதாக கூறுகின்ற இந்த அரசாங்கத்திற்குப் பல்லாண்டுகளாக சிறைவாழ்க்கை வாழ்ந்து தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தொலைத்துவிட்ட இவர்களுக்கு விடுதலை அளிக்கவேண்டும் எனத் தோன்றவில்லையா? கடந்த பல மாதங்களாக அமைச்சர் மிலிந்த மொரகொட தமிழ்க் கைதிகள் தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும், உறுதிமொழிகளையும் அள்ளிவீசி கொண்டிருக்கின்றார்.
இனிமேல் எங்களுக்கு உறுதிமொழிகள் தேவையில்லை. பொது மன்னிப்பு அல்லது சட்ட ரீதியான பிணை அல்லது புனருத்தாபன திட்டங்களில் சேர்த்துக்கொள்ளல் ஆகிய ஏதாவது ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். கைதிகளின் இத்தகைய உணர்வுகளை நான் அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றேன். நாளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளைச் சந்திப்பதற்கும் விரும்புகின்றேன்.
கிழக்கில் புதிய ஆயுதக்குழு கிழக்கிலே இன்று புதிதாக மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு தோன்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது அரசாங்கத்தின் சதிவேலை என்றே நாம் சந்தேகிக்கின்றோம். எதிர்வரும் தேர்தல் காலத்தில் ஜனநாயக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களைக் கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டப்படுகின்றதா என இந்த அரசைக் கேட்க விரும்புகின்றேன்.
உலகத்திலேயே சிறந்த இராணுவம் நமது நாட்டு இராணுவம் என மார்தட்டும் இந்த அரசாங்கம், தனது படைப்பிரிவை அனுப்பி வைத்து இந்த சட்டவிரோத ஆயுதக்குழுவைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாதா? எனது பாதுகாப்புக்கு தொடர் ஜீப் அணியை வழங்கியது இந்த அரசாங்கம் அல்ல. அது நீதி மன்றத்தால் வழங்கப்பட்டதாகும். ஆனால் அந்த நீதி மன்ற உத்தரவையும் இந்த அரசாங்கம் இன்று மீறுகின்றது.
எனக்கு தருவதற்கு மேலதிக வாகனம் இல்லை என்று கூறுகின்ற பொலிஸ் திணைக்களம் நேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத தனிநபர்களுக்கூட பாதுகாப்பு வாகனங்களையும், அதிகாரிகளையும் வழங்கியுள்ளது. இது அரச வளங்களைத் தமது கட்சி அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் செயலாகும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை "என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக