20 நவம்பர், 2009

ஐ.தே.மு. பொதுவேட்பாளர் பட்டியலில் ஜெனரல் சரத் உட்பட 9 பேரின் பெயர்கள் திகதியை அறிவித்தால் நாம் வேட்பாளரை அறிவிப்போம் என்கிறார் மங்களஇராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட 9 பேரின் பெயர்கள் இணைக்கப்பட்ட பொது வேட்பாளர் பட்டியல் ஐக்கிய தேசிய முன்னணியால் ஆராயப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகவோ அல்லது இராணுவ வீரராகவோ அல்லது சீருடை களைந்த பொது மகனாகவோ அதுவும் ஜனநாயக ரீதியில் மக்களின் ஆதரவுடனே அரசியலுக்குள் வருவதற்கு முயற்சிக்கின்றார். அவர் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.

ராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மங்கள எம்.பி. இங்கு மேலும் கூறுகையில் இராணுவத்தினரை தேர்தலில் அறிமுகப்படுத்தியதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுகம் தான். கடந்த காலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இராணுவத்தைச் சேர்ந்தோரை களத்தில் நிறுத்தியது அரசாங்கம். இதற்கு நான் அன்றும் இன்றும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன்.

அந்த வகையில் ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொறுத்தமட்டில் தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் சீருடையை களைந்துவிட்டே மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்குள் நுழைவதற்கு முயற்சிக்கின்றார்.எதிர்க்கட்சிகளின் பொதுகூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளர் பட்டியலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற விடயத்தை சுதந்திரக்கட்சி மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறிய ஜனாதிபதி அதனை இன்று வரையில் அறிவிக்கவில்லை.அந்தளவுக்கு அச்சம் அவரை ஆட்கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணிக்கு எந்தவிதமான நெருக்குதலும் இல்லை. எமக்குப் பயமும் இல்லை பீதியும் இல்லை.எனவே ஜனாதிபதி தேர்தலைத்தான் முதலில் நடத்துவது என்று ஜனாதிபதி மஹிந்த நினைப்பாரேயானால் அதற்கான திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்ததும் உடனடியாக ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம். எமது பொதுவேட்பாளர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பவராகவும் வடக்கிலே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பவராகவுமே இருப்பார்.

1000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் உருவம் பொறித்த ஆயிரம் ரூபா நாணயத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது எந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றாகும். அரச தலைவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னரே அவரது உருவம் பொறித்த முத்திரைகள் கூட வெளியிட முடியும். எஸ். டபிள்யூ, ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மரணம் சம்பவித்து பல வருடங்களின் பின்னரே அவரது முகம் பதித்த நாணயத்தாள் வெளியிடப்பட்டது ஆனால் தற்போது நடைபெற்றிருப்பது அப்பட்டமான தேர்தல் பிரசாரமாகும்.

ஆணையாளருக்கு கடிதம்

கடந்த காலங்களில் அரச சொத்துக்கள், அரச ஊழியர்களை தேர்தல் பிரசாரத்துக்காக பாவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மத்திய வங்கியை பாவித்துள்ளார். இது பாரதூரமான விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவிருக்கின்றேன்.ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரையில் இந்த நாணயத்தாள் பாவனையில் விடப்படக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம். இவ்வாறு முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரக்கட்சி மாநாட்டை காட்டி எம்மை அச்சுறுத்துவதற்கும் அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கும் ஜனாதிபதியினால் தீட்டப்பட்ட திட்டம் நிறைவேறவில்லை என்றதும் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை பல்வேறு கோணங்களில் முன்னெடுத்து வருகிறார் எதற்கும் நாம் அஞ்சிவிடப்போவதில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக