1 அக்டோபர், 2009

ஈரானின் அணுசக்தி தொடர்பான முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் ஆரம்பம்
ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி விவகாரம் தொடர்பான முக்கியத்துவம் மிக்க பேச்சுவார்த்தைகள் நேற்று வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின.

பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளதும் மற்றும் ஜேர்மனியினதும் பிரதிநிதிகளும் ஈரானிய பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றனர்.

முதல் நாள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஒத்துழைக்க ஈரான் தவறியுள்ளதாக ஜேர்மனி தெரிவித்தது. ஈரானானது தனது இரண்டாவது அணுசக்தி நிலையம் தொடர்பான இரகசியத்தை மறைத்து சட்டத்திற்கு புறம்பான வகையில் நடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

""யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தை நிர்மாணிக்க தீர்மானித்த தினத்தில், அது தொடர்பில் ஈரான் எமக்கு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அது அவ்வாறு செய்யவில்லை, என சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் தலைவர் மொஹமட் எல்பரடேயி தெரிவித்தார்.

ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்து ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் குறிப்பிடுகையில், ஜெனிவா கலந்துரையாடல் ஓர் வாய்ப்பாகவும், ஓர் பரீட்சையாகவும் உள்ளதாக குறிப்பிட்டார்.

மேற்குலக நாடுகளுக்கு உலகளாவிய ரீதியிலான தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், ஏனைய நாடுகளைக் கையாளும் வழிமுறையை திருத்திக் கொள்ளவும் இது ஓர் சந்தர்ப்பமாக அமைகிறது என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக