1 அக்டோபர், 2009

மீள்குடியேற்றமின்றி தொடர்ந்தும் அவலம் : திருக்கோவில் கூட்டத்தில் கிராமவாசிகள் கவலை

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிக்குடிச்சாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மீள் குடியேற்றமின்றி தொடர்ந்தும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் மற்றும் பாதுகாப்பு இணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இக் கிராமவாசிகள் எதிர்வரும் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கு முன்னதாக தமது மீள் குடியேற்றத்தின் அவசியத்தையும் சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வயல்வெளிகளை அண்மித்த சாகாமம், கஞ்சிக்குடிச்சாறு,காஞ்சுரன்குடா மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 905 குடும்பங்கள் (3093 பேர்) இடம்பெயர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக யுத்த அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இக்குடும்பங்களில் சாகாமம் கிராமத்தைச் சேர்ந்த 138 குடும்பங்கள் (517 பேர்), காஞ்சுரன்குடா கிராமத்தைச் சேர்ந்த 147 குடும்பங்கள் (556 பேர்) என 469 குடும்ங்கள் (1598 பேர் ) கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி மீள் குடியமர்த்தபபட்டிருந்தனர். எனினும் காஞ்சுரன்குடா, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மேலும் 620 குடும்பங்கள் (2020 பேர்) இதுவரை மீள் குடியேற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று நடைபெற்ற சிவில் மற்றும் பாதுகாப்பு இணைப்புக் குழுக் கூட்டத்தில் அந்த பிரதேசத்தில் தாம் குடியேறி பெரும்போக வோளாண்மைச் செய்கையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அதிகாரிகளைக் கிராம மக்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அடுத்த ஆண்டு பெரும்போக வேளாண்மைச் செய்கை வரை தங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பற்றிக் சில்வா,

"குறிப்பிட்ட பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும்போக வோளாண்மைச் செய்கையில் ஈடுபட முடியும்"என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக