1 அக்டோபர், 2009

30.09.2009 தாயகக்குரல்21

இந்த நாட்டில் இனவாதம் இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழிலும் சிங்களத்திலும் அடிக்கடி கூறிவந்தாலும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாதவரை இனவாதத்தை இல்லாமல் செய்யமுடியாது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மக்கள் தொடர்ந்து அரசியல் வாதிகளால் இனவாத உரு ஏற்றப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இதிலே தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதற்கு சிங்கள தலைவர்களே காரணம் என தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள்மேல் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் உண்மையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதில் தமிழ் தலைவர்களுக்கும் பங்குண்டு என்பதை மறைக்கமுடியாது.


இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதில் தமிழ் தலைவர்களும் தவறு இழைத்துள்ளனர். கடந்த காலங்களில் தேசியம் பேசிப்பேசியே தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றக் கதிரையை நிரப்பிவந்த தமிழ் மிதவாத தலைவர்களிடம் ஏமாந்த தமிழ் மக்கள் பின்னர் திவிரவாதிகள் பக்கம் சென்றனர். அவர்களும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் யதார்த்தமான அணுகுமுறைகளை கையாளாததால் இன்று தமிழ் மக்கள் முன்னர் அனுபவித்த உரிமைகளையும் இழந்து நிர்க்கதியாக உள்ளனர்.


1994ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்கா இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தார். அவர் ஜனாதிபதித் தேர்தலின்போதும் அந்த வாக்குறுதியையே அளித்திருந்தார். எனவே அவருடைய காலத்தில் சமாதானம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்பட்டது. அவருடைய காலத்தில் சமாதானத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டபோதிலும் அதை சரியான முறையில் பயன்படுத்த தமிழ் தலைவர்களும் புலிகளும் தவறிவிட்டனர்.
ஜனாதிபதி பிரேமதாசா காலம் முதல் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரையான தலைவர்களும் புலிகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பலதடவைகள் பேச்சுவார்த்தையை மேற்கொண்ட போதிலும் எதுவும் வெற்றியளிக்கவில்லை.
பலமுறை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இறுதிக்காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தை என்பது சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையா அல்லது பாரிய யுத்த தயாரிப்;புக்கான காலஅவகாசமா என்ற பரவலான சந்தேகம் மக்களிடையே காணப்பட்டது.


மக்கள் சந்தேகித்தபடியே 2002 யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் அரசும் புலிகளும் யுத்த தயாரிப்புக்களையே செய்துள்ளனர் என்பது இறுதி யுத்தத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. கிழக்கில் மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் வடக்கில் புதுமாத்தளனில் முடிவுற்றது. யுத்தத்தில் புலிகள் அழிக்கப்பட்டதும் தமிழர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை, தீர்வு எதுவும் தேவையில்லை என்ற குரல்கள் தெற்கில் ஒலிக்கத் தொடங்கின.
மொழி, கல்வி, தொழில், காணி சம்பந்தமான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருப்பதை 1957ல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா அரசு ஏற்றுக்கொண்டதன் பின்னணியில்தான் பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம், மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தீர்வுத் திட்டம் முதலியவை எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னணியேயாகும்.


யுத்தம் முடிந்த பின்னர் இனப்பிரச்சினை பின்தள்ளப்பட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளை மீள்குடியேற்றுவது தொடர்பான பிரச்சினையே எல்லாத் தரப்பிலும் முன்னிலை வகிக்கிறது. அனைத்து கட்சிகளும் மீள்குடியேற்றம் பற்றியே அரசின்மேல் குற்றம் சாட்டி வருவதால் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய நெருக்கடிகள் அரசுக்கு தற்காலிகமாக குறைந்துள்ளன.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்மாகாணசபைத் தேர்தலில் ஆகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று வெற்றி பெறவேண்டும் என்பதே அரசின் தற்போதைய இலக்காகும். அடுத்த இலக்கு ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகிய இரண்டிலும் அதிக கூடிய பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவேண்டும் என்பது. அதன் பின்னரே இனப்பிரச்சினைக்கான அரசின் அரசியல் தீர்வு பற்றிய உண்மையான நிலைப்பாடு தெரிய வரும்.
இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடியும்வரை அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இப்போது அதன் கூட்டாளி கட்சிகளான ஹெலஉருமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றையும் அனுசரித்துப் போகவேண்டி நிலையில் அரசு உள்ளது.


இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் ஏற்படுத்தப்;பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தமது அறிக்கையின் சாராம்சத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு அவரின் பதிலுக்காக காத்திருக்கிறது.
ஜனாதிபதியிடம் கையளித்த அரசியல் தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக வெளியிடவேண்டும்; என்று ரணில் கேட்டிருக்கிறார். அறிக்கையை வைத்து ஒரு அரசியல் இலாபம் தேட ரணில் நினைத்திருக்கலாம்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பொதுத் தேர்தலுக்கு முன்னரோ இனப்பிரச்சினை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வெளியிட்டு மக்கள் ஆதரவை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி விரும்பமாட்டார்.
அதேவேளை யுத்தம் முடிவுற்றதால் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் அரசு தாமதம் காட்டினாலும் சர்வதேச சமூகம் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்டுகின்றன. ஆனால் இவர்களுடைய அக்கறை நிரந்தரமானது என எதிர்பார்க்கமுடியாது.


ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு முன்பாகவே இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைக்கவேண்டும்; என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்கும்வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதில்லை என்ற தோரணையில் இலங்கை ஜனாதிபதி நடந்துகொள்வது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என அமெரிக்கா தெரிவிக்கிறது.
ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் எதிர்பார்க்கலாம். ஆனால் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படவேண்டும்.
என்ன நிர்ப்பந்தம் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலும்;, பொதுத் தேர்தலும் முடிந்த பின்னரே இனப்பிரச்சினை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக