21 செப்டம்பர், 2009

செங்கல்பட்டு முகாமில் இலங்கை அகதிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்






செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 50 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்ற போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். இவர்களில் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் 70 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களில் பலர் மீது பொலிஸார் எந்தவித வழக்கையும் பதிவு செய்யாமலும், சிலர் மீது பதிவு செய்யப்பட்டும் வழக்குகளைத் தொடர்ந்து நடத்தாமலும் அலைக்கழிக்கப்பட்டும் வந்ததாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரின் இந்தப் போக்கைக் கண்டித்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் அனைவரும் கடந்த ஜூலையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இதையடுத்து இவர்களிடம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருக்கும் 12 பேரை உடனடியாக விடுவிப்பதாக உறுதி அளித்தனர்.மற்றவர்கள் மீதான வழக்குகளை அடுத்த ஒரு மாதத்தில் விரைந்து முடிப்பதாகவும் உறுதி அளித்தனர்.

இதன் காரணமாக சிறப்பு முகாம் அகதிகள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன்படி வழக்கு பதிவாகாமல் இருந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்த ஒரு மாத கால அவகாசம் முடிந்துவிட்டதை அடுத்து கடந்த 5ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகதிகள் அறிவித்திருந்தனர்.

பொலிஸார் தரப்பில் மேலும் 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த 15 நாள் அவகாசமும் முடிந்த பிறகும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சிறப்பு முகாம் அகதிகள் 50 பேர் (உடல் நிலை பாதிப்பு காரணமாக 8 பேர் பங்கேற்கவில்லை) மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக