21 செப்டம்பர், 2009

இலங்கைக்கு ஈரான் மேலும் கடன் உதவி

வட்டியில்லா கடன் அடிப்படையில்
மசகு எண்ணெய் வழங்க இணக்கம்

வட்டியில்லாக் கடன் அடிப்படையில் மேலும் ஒரு வருட காலத்திற்கு மசகு எண்ணெயை இலங்கைக்கு வழங்குவதற்கு ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணியான எம். எம். ஸ¤ஹைர் ஈரானிய அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரானுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருந்த போது ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையும் இலங்கைக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் ஈரான் மசகு எண்ணெயை வழங்கியது.

இந்த வசதியை மேலும் நீடித்துச் கொள்ளுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானியத் தூதுவரான ஸ¤ஹைர் ஈரானிய எண்ணெய் அமைச்சின் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் பயனாக 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையும் வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு மசகு எண்ணெய் வழங்க ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை இலங்கைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக சலுகை வட்டியடிப்படையில் மசகு எண்ணெயை வழங்கவும் இப்பேச்சுவார்த்தையின் போது ஈரானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வட்டியில்லா கடன் அடிப்படையிலான வசதி மூலம் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து இலங்கை 1.05 பில்லியன் (110,550 மில்லியன் ரூபா) அமெரிக்க டாலர்கள் பெறுமதியான மசகு எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

வட்டியில்லாக் கடன் அடிப்படையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு ஈரானிலுள்ள இலங்கைத் தூதுவர் ஸ¤ஹைருடன் நிதியமைச்சு செயலாளர் சுமித் அபேசிங்கவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ. பி. தோரதெனிய ஆகியோர் கூட்டிணைந்து செயற்பட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக