28 டிசம்பர், 2009


அமைச்சர் முரளிதரனுடன் இணைந்தே செயற்படுகிறேன்”
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென்பதே ஒரே இலக்கு– கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென்பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார். இருவரும் வௌ;வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


யாழ்தேவி ரயில் சேவை எப்ரல் மாதத்திலிருந்து
ஓமந்தைவரை நீடிக்கும்




யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓமந்தைவரை நீடிக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தைவரை பயணிக்க உள்ளதாகவும் பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர கூறினார்.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார்.

மோதல் காரணமாக கொழும்பில் இருந்து வவுனியாவரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம்வரை ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம்வரை மீண்டும் ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதோடு இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.



சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 தமிழ்க் கைதிகள் இந்த வாரம் விடுவிப்பு சட்ட மாஅதிபர் தெரிவிப்பு




இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்தபோது விசாரணைக்கென கொண்டுசெல்லப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38 பேரும் இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார். சீஐடி யினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்டவர்கள் எவ்விதமான குற்றச்செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும், ஏற்கனவே 100 பேர் இவ்;வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறினார். தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு, ஒரு மாதத்தில் குறைந்தது 100 பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்க உறுப்பினர்கன் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிரவும் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 700 பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர். இவர்களை மீளக்குடியமர்த்த அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு
பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க
முதலமைச்சர் சந்திரகாந்தன் பணிப்புரை




கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக்கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் வெள்ளப்பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிக்கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைசச்ர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரையில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

மேலும், உலக உணவுத்திட்டத்தின் உதவியுடன் தாழ்ந்த பிரதேசங்களில் வடிகான்களைச் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 10 ஆந் திகதியிலிருந்து வெள்ளப் பாதிப்பு இடைக்கிடை ஏற்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் சுமார் 35 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக