14 டிசம்பர், 2009

பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தேர்தலில் போட்டி-

உயர் கல்வித்துறை பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல்மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான இவர், அக்கட்சியிலிருந்து விலகி அரசுடன் இணைந்து பிரதி உயர் கல்வித்துறை அமைச்சராக பதவிவகித்து வருகின்றார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் எடுத்துள்ள தீர்மானம் குறித்து அவர் இன்று தனது மாவட்ட ஆதரவாளர்களை சந்தித்து அபிப்பிராயமும் பெறவுள்ளார். அவரது சாய்ந்தமருது இல்லத்தில் இது தொடர்;பான சந்திபொன்று நடைபெறவுள்ளதாகவும், இதன்போது தனது நிலைப்பாடு குறித்து மையோன் முஸ்தபா விளக்குவாரென்றும் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என எடுத்துள்ள தீர்மானத்தின்பேரில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன் தனது பிரதியமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பாதுகாப்புச் செயலர் கோத்தபாயயே இறுதிக்கட்ட மோதலில் போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டாரென ஜெனரல் தெரிவிப்பு

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைவரும், வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவருமான ஜெனரல் சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. புலிகளுடனான யுத்தம் கடந்த மேமாதம் முடிவுக்குவந்த வேளையில் புலிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் சரணடைய இடம்தரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது பாதுகாப்புச்செயலர் கோட்டாபாயதான் என்று ஜெனரல் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத்தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளுர் ஊடகவியலாளர்கள்மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக ஜெனரல் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்மஸ்தீவில் இடப்பற்றாக்குறையால் அகதிகளுக்கு பல்வேறு சிரமங்கள்-

இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் 1400ற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் அவர்களைத் தங்கவைக்கவும் அவர்களுக்கு வசதிகளை வழங்கவும் முடியாதிருப்பதாக ஆஸி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில் அவுஸ்திரேலிய எல்லைக்குள் அத்துமீறி 53 சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் படகுகள் இதுவரையில் நுழைந்துள்ள நிலையில் 54வது படகும் வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளரை நிறத்தாது
-

ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதில்லை என தீர்மானித்துள்ளதாக தமிழ்க்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனியானதொரு நிறுத்துவதில்லை என்ற ஒருமித்த முடிவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களான நாம் வந்துள்ளோம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது அல்லது இத்தேர்தலில் என்ன செய்ய வேண்டும், இத்தேர்தலை தமிழ்மக்கள் கடந்த ஆண்டு செய்தது போன்று பகிஸ்கரிப்பதா அல்லது நிராகரிப்பதா, போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக தேர்தல் நியமனம் தாக்கல் செய்யப்படுகின்ற எதிர்வரும் 17ம் திகதியின் பிறகு பிரதான வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனை தமிழ் மக்களுக்கு வழங்குகிறார்கள். வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல்தீர்வு விடயத்தில் என்ன நிலைப்பாட்டை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கிறார்கள் போன்ற விடயங்களை ஆழமாக பரிசீலித்து அதன்பின் எமது நிலைப்பாட்டை எதிர்வரும் காலங்களில் அறிவிக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காக்கைகுளத்தில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றல்-

வவுனியா காக்கைக்குளம் பிரதேசத்தில் இருந்து நேற்றையதினம் ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் வவுனியா பொலீஸ் நிலையத்தின் விசேட பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது ஒன்றரை கிலோ எடைகொண்ட கிளைமோர் குண்டு பொருத்தப்பட்ட தற்கொலை அங்கி 01, டெட்னேற்றர் 02, கைக்குண்டுகள் 09 உள்ளிட்ட மேலும் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் மிக இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக