14 டிசம்பர், 2009

மனோ கணேசன் - சரத் பொன்சேகா விசேட சந்திப்பு


Wind Mill

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்க்கட்சிகளின் சார்ப்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அதனையடுத்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் பதவியேற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் உடனடியாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயங்களில் தமிழ் மக்கள் தொடர்பிலான உடனடி பிரச்சினைகளான தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள், காணாமல் போனோர், போராளிகளின் புனர்வாழ்வு, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள், 1983 முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது நிலங்கள் மீள கையளிக்கப்படல், யாழ் முஸ்லிம் அகதிகளின் மீள் குடியேற்றம் மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலைமைகள் ஆகியவை சம்பந்தமாக விரிவாக பேசப்பட்டது.

குறிப்பாக மனோ கணேசன் எம்பி கடந்தவார இறுதியில் யாழ்ப்பாணம் சென்றபொழுது அங்கு அவரை சந்தித்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தை சார்ந்த விரிவுரையாளர்கள், மாணவர்கள், யாழ் வணிக கழகத்தினர், யாழ் கத்தோலிக்க பேராயர் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், நல்லை ஆதீன கர்த்தா மற்றும் இந்து சமூகத்தினர், யாழ் இஸ்லாமிய பள்ளிவாசல் சபையினர், அரச சார்பற்ற நிறுவத்தினர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் சரத் பொன்சேகாவிடம் தெரிவிக்கப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சரத் பொன்சேகாவுக்கு மனோ கணேசனுக்கும் இடையில் நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கையை விரைவில் ஊடகங்களுக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக