14 டிசம்பர், 2009

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அரசாங்கத்தை நிறுத்துவதற்கு முயற்சி-அரசாங்கம்

No Image


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நிறுத்துவதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சிக்கின்றார். இதற்கான சூழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அவரது கருத்தினை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் பல்வேறு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சதி முயற்சியில் சிக்குண்ட நிலையிலேயே ஜெனரல் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைய வந்த புலித் தலைவர்களில் சிலர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டளைக்கமைய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அரசாங்கம் மேற்கண்டவாறான அறிவிப்பினை விடுத்தது. இதனை தெளிவுப்படுத்தும் வகையிலான விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சரவையின் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவக்க, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதாவது:

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது, பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன், சமõதான செயலக பிரதானி புலித்தேவன், புலிகளின் சிரேஷ்ட இராணுவ தளபதி ரமேஷ் ஆகியோர் அவர்களின் குடும்பத்தினருடன் படையினரிடம் சரணடைய போவதாக அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டளைக்கமைய அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சரத் பொன்சேகா ஆங்கில வார இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

58ஆவது படையணியின் தளபதியாக இருந்த பிரிகேடியர் ஷவேந்திரசில்வாவுடன் தொடர்பு கொண்ட பாதுகாப்பு செயலாளர் விடுதலைப் புலிகளின் எந்தவொரு தலைவரையும் சரணயடைய அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்களை சுட்டுக்கொல்லுமாறும் உத்தரவிட்டிருந்தார் என்று சரத் பொன்சேகா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து நாட்டையும் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் முற்றுமுழுதாக இழிவுப்படுத்தியுள்ளது. இந்தக் கருத்தின் மூலம் இராணுவ கொள்கையையும் சட்ட விதிமுறைகளையும் அவர் சீரழித்துள்ளார். மொத்தத்தில் இலங்கை வரலாற்றுக்கே ஒரு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா ஒரு இராணுவ தளபதியாக சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இராணுவத்தினரின் வெற்றி அனைவரையும் சாரும். எந்த இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்னெடுக்கவில்லை. அனைவரும் களத்தில் இறங்கி போரிட்டனர். இந்த யுத்தத்தின் போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரால் கொல்லப்பட்டனர் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் இன்று சமூகத்தின் நம்பிக்கையை பாழடிக்கும் வகையிலும் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் சரத் பொன்சேகா முற்றிலும் மாறுப்பட்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அவருடைய இவ்விரு கருத்துக்கள் தொடர்பிலும் அவரிடமே நாம் விளக்கம் கோருகிறோம். இலங்கை இராணுவத்தினரோ அல்லது அரசாங்கமோ சர்வதேச போர் சட்ட விதிமுறைகளையோ இராணுவ கொள்கைகளையோ ஒருபோதும் மீறிச் செயற்பட்டதில்லை. இருப்பினும் சர்வதேச விதிமுறைகளை மீறி செயற்பட்டதான குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீதும் இராணுவத்தினர் மீது சர்வதேச ரீதியில் சுமத்தப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுக்களை சவால்களாக எதிர்க்கொண்ட அரசாங்கம் அதற்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் ஷவேந்திரசில்வா ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பழி அனைத்து இராணுவத்தினரையும் இழிவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது. புலித் தலைவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லுமாறு இராணுவத்தினருக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டிருந்தால் ஜோர்ச் மாஸ்டர், தயா மாஸ்ரர், பிரபாகரனின் பெற்றோர் மற்றும் புலிகளுக்கு சிகிச்சையளித்தவர்கள் ஆகியோர் உட்பட 10ஆயிரத்திற்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டிருக்க முடியும். அவர் அப்படி செய்திருந்தால் இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லவா?

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைவரையும் காட்டிக் கொடுக்க முனையும் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கவலையடைகிறது. இவ்வாறானதொருவர் இந்நாட்டுக்கு தலைமை வகித்தால் நாடும் நாட்டு மக்களும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்பது வெளிப்படையான உண்மையேயாகும்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க கூறியதாவது:

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின் போது இராணுவத்தின் 58வது, 59வது மற்றும் 53 வது படையணியினர் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் அனைவரையும் சுற்றி வளைத்தனர். இதன்போது புலிகளின் தலைவர்களில் சிலர் 58வது படையணியினரிடம் சரணடைது போன்ற போர் சதியினை முன்னெடுத்தனர். இந்தத் தருணத்தில் புலிகளின் பிரதேசத்தை நெருங்கி வரும் இராணுவத்தின் 59ஆவது படையணியை முற்றாக அழிப்பதே அந்த சதியாகும். இருப்பினும் அவர்களின் இந்த சதி முயற்சி பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டது. அத்துடன், புலித் தலைவர்கள் உட்பட சுற்றிவளைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினர் புலிகளின் இந்த சதி திட்டத்திற்கு அகப்பட்டிருந்தால் பிரபாகரன் அவரது மகன் சாள்ஸ் உட்பட புலிகளின் தலைமைத்துவம் இன்னமும் எஞ்சியிருக்கும்.

பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய இராணுவத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் சரத் பொன்சேகா செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட அனைத்து பாதுகாப்பு தரப்பினரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதான முயற்சியினையே அவருடைய இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இராணுவத்தினரின் அபிமானம், தியாகம் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வெற்றி படுகொலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது.

விமல் வீரரவன்ச இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் விமல் வீரவன்,

ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசிக்கவுள்ளார் என்ற செய்தி அறிந்ததும் பலர் சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர். அவருடைய இந்த தீர்மானத்தின் பின்னணியில் யார் உள்ளார் எனும் கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி ஓரிரு தினங்களிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் தடவையாகும். இந்த தீர்மானத்திற்கு வருவதற்கு அவர் ஒரு மனநோயாளியாக இருக்க வேண்டும். அல்லது அவரின் பின்னால் பாரியதொரு சக்தி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பினர்.

ஆனால் இன்று இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. அவர் வழங்கிய பேட்டியின் மூலம் அவரே விடையாகியுள்ளார். சரத் பொன்சேகாவின் இந்த கருத்துக்கள் தேர்தலில் அவருக்கு தோல்வியையே பெற்றுக் கொடுக்கும். அவர் வெளியிட்ட கருத்தில் உண்மை உள்ளதா? இல்லையா? என்பது அடுத்த பிரச்சினை. ஆனால், அதற்கு முன்னர் அவர் ஏன் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டார் எனும் கேள்விக்கு பதில் தேட வேண்டும். சர்வதேச ரீதியில் அவர் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரமே இவ்வாறாதொரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டபோது, அரசாங்கம் அதனை இல்லை என்று மறுத்ததுடன் அதற்கெதிராக நடவடிக்கையும் எடுத்தது. இந்நிலையில், போரில் ஈடுபட்ட பிரதானி ஒருவர் வாயிலாக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அந்த சர்வதேச நடவடிக்கை எடுத்தது. அந்த வலைக்குள் சரத் பொன்சேகா சிக்கிக் கொண்டார். மனசாட்சியுள்ள மனித நேயமுள்ள எந்தவொரு நபரும் இவ்வாறானதொரு பிடிக்குள் சிக்குண்டு இருக்கமாட்டார். இது முற்றும் முழுதான வரலாற்று ரீதியான காட்டிக் கொடுப்பாகும். மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுத்தலை விட பன்மடங்கு பெரியதாகும். போரில் ஒன்றாக செயற்பட்டவர்ளை இவ்வாறு பெயர் குறிப்பிட்டு காட்டிக் கொடுக்க எவரால் முடியும். நாட்டின் நிலைமையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேசம் எடுத்த இந்த சதி முயற்சியின் முன்னால் தொழில்சார் யுத்தத்திற்கு மாத்திரம்தான் நான் பொறுப்பானவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சரத் பொன்சேகா ஏனையவர்களை குற்றவாளியாக காட்டிக் கொடுத்துள்ளார். அண்ணாந்து பார்த்து எச்சில் துப்பிக் கொள்ளும் செயலையே அவர் செய்துள்ளார்.

பொது மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் அனைவரையும் காட்டிக் கொடுத்துள்ள ஒருவருக்கா நீங்கள் ஒத்துழைப்பு வழங்க உள்ளீர்கள்? நாட்டை பாதுகாத்து நாட்டுக்காக தியாகங்களை செய்த பாதுகாப்பு தரப்பினருக்கு சேறுபூச வேண்டாம். அரசியல்வாதிகளான எங்கள் மீது சேறுபூசுங்கள் நாம் அதனை தாங்கிக் கொள்கிறோம். இராணுவத்தினரை தயவுசெய்து இழிவுப்படுத்த முயலவேண்டாம் என்றார். கேள்வி: பாதுகாப்பு செயலாளர் மற்றும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர்? பதில்: நாட்டில் சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் பிரகாரம் நாம் நடவடிக்கை எடுக்க ஆலோசித்துள்ளோம்.

கேள்வி: தனது சகாக்களை காட்டிக் கொடுத்த சரத் பொன்சேகா தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் சரத் பொன்சேகா முதல் முதலாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரபாகரனின் பெற்றோரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதான கருத்தொன்றை முன்வைத்திருந்தார். அந்த கருத்து உண்மையாகி விட்டதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அவர் புலிகளிடம் உண்மையிலேயே பணம் பெற்றுக் கொண்டு விட்டார் போலும். அதனாலேயே அவர் பாதுகாப்பு தரப்பினரையும் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றார்.

கேள்வி: நிலக்கண்ணிகளை அகற்றுதல் மீள் குடியேற்றம் தொடர்பில் தான் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் இடமளிக்கவில்லை என்று சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளாரே?

பதில்: அந்த வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்ததுடன் அதில் வெற்றியும் கண்டுள்ளது. தற்போது வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் கிட்டத்தட்ட முழுமையான அளிவில் அகற்றப்பட்டுள்ளன. பொதுமக்களும் மீளகுடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோர் சுதந்திரமாக நடமாட வழிசமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கு அவருடைய வேலைத்திட்டம் முக்கியப்படுவதாக இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக