ஐ.ம.சு.மு: 160 தேர்தல் தொகுதிகளிலும் பிரசார முன்னேற்பாடுகள் பூர்த்தி
17ம் திகதியின் பின் தேர்தல் விஞ்ஞாபனம்
160 தேர்தல் தொகுதிகளிலும் தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்கும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின் ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
33 கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பிரசாரப் பணிகளை முன்னெடுப்ப தற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. தேர்தல் குழுக்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டும் கூட மாகாண சபைத் தேர்தலில் காணப்பட்ட ஊக்கம் கூட எதிர்க்கட்சி தரப்பில் இம்முறை கிடையாது. ஆனால் 2005ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைவிட சிறந்த முறையில் இம்முறை தேர்தல் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடுபூராவும் உள்ள 1800 பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தேர்தல் பிரசார பணிகள் முன்னெடுப்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் இலக்குகள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மக்கள் தாமாக விரும்பி ஜனாதிபதியின் வெற்றிக்காக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி அடங்களான பல எதிர்காலத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக