16 டிசம்பர், 2009

நம்பகத்தன்மையற்ற பொன்சேகா மக்களிடமிருந்து அந்நியமாகிறார்

இன்று சொல்வதை நாளை மறுப்பவர் - ஐ.ம.சு.மு அமைச்சர்கள்

தான் முதலில் தெரிவித்த கருத்தை 24 மணி நேரத்திற்குள் மாற்றிச் செல்லும் சரத் பொன்சேகாவின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு பிரதேச சபை உறுப்பினருக்குள்ள அரசியல் ஞானம் கூட கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த முயற்சிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்குத் தேவையான சாட்சிகளை பொன்சேகா வழங்கி வருவதாகவும் வாக்குப் பெறுவதற்காக இராணுவத்தைக் ‘காட்டிக்கொடுக்கும் இத்தகையோருக்கு ஜனவரி 26ஆம் திகதி மக்கள் தக்க பதிலை வழங்குவர் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (15) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறியதாவது:-

தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதாக சில ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள பொன்சேகா பாரதூரமான செய்தியை வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடர தயங்குகிறார். இவர் வெளியிட்ட கூற்று தவறுதலாக பிரசுரிக்கப்படவில்லை. திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது.

இவர் நவம்பர் 16ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்த போதும் ஆறு மாதங்களுக்கு பின்னரே ஐ. தே. க.வுடனும் ஜே. வி. பியுடனும் இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த இரகசியமாக பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. பதவியில் இருக்கையிலே தனது உயரதிகாரிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட இவர் சதி செய்துள்ளார். தான் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ள போன்சேகாவுக்கு பிரதேச சபை உறுப்பினருக்கு உள்ள அரசியல் ஞானம் கூட கிடையாது என்றார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது:-

கீர்த்தி மிக்க இராணுவத்தளபதியான பொன்சேகா இன்று கீழ்த்தரமான அரசியல்வாதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்காக எத்தகைய மோசமான காரியத்திலும் இறங்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இவர் இலங்கையில் இருக்கவில்லை. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அவரின்றியே இறுதிக்கட்ட யுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய தகவல்படியே சரணடைய வந்த புலித்தலைவர்களை படையினர் கொலை செய்ததாக தான் கூறியதாக பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் ஆலோசனைப்படியா இவர் யுத்தத்தை முன்னெடுத்தார்.

இவர் ஜனாதிபதியானால் கூட உடகவியலாளர்கள் சொன்ன விடயங்களை அறிவிக்க ஊடகவியலாளர் மாநாடு நடத்துவார். பின்னர் அதனை மறுக்க மாநாடு நடத்துவார்.

மேற்படி குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க முடியும். தான் கூறிய கூற்றை 24 மணி நேரத்தில் மாற்றிக்கூறும் பொன்சேகாவின் நம்பகத் தன்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவரின் கூற்று காரணமாக பொன் சேகாவுக்குக் கிடைக்க விருந்த வாக்குகளை இழக்க நேரிட்டுள்ளது.

குடும்ப அரசியலை ஒழிக்கவே போட்டியிடுவதாக பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் பசில் வடக்கு, கிழக்குப் பகுதிகளை சிறப்பாக அபிவிருத்தி செய்து வருவதோடு கோட்டாபே யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

தான் கூறிய கூற்றைத் தானே மறுப்பதன் மூலம் பொன்சேகாவின் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயுள்ளது. அவரின் கருத்துக்கள் செல்லாக் காசுகளாகிவிட்டன என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக