19 டிசம்பர், 2009

ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் தெரிவுசெய்ய நாட்டு மக்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்

அலரி மாளிகை நிகழ்வில் நியாஸ் மெளலவி

ஹிஜ்ரி 1431 முஹர்ரம் பிறை பிறக்கின்ற இம் மங்களகரமான வேளையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இரண்டாம் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நேற்று முன்தினம் காலை அலரி மாளிகையில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியின் போது உரைநிகழ்த்திய கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் இஸ்லாமிய விவகார ஒருங்கமைப்பாள ருமான மெளலவி நியாஸ் முஹம்மத் உரையாற்றும் போது கூறினார்.

ஜனாதிபதி வேட்புமனு தாக்கல்செய்ய முன்பு ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வேண்டி இடம்பெற்ற சர்வசமய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். பெளத்த மகாசங்க தேரர்கள், இந்து, கத்தோலிக்க மதகுருமார்கள், முஸ்லிம் சமயத் தலைவர்கள் தத்தமது மதங்களின் பிரகாரம் ஜனாதிபதியை ஆசீர்வதித்து தேர்தல் செயலகத்துக்கு வழியனுப்பி வைத்தனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நியாஸ் மெளலவி :- இடம் – வலம், நிறுத்து - காலைப் பின் எடுத்து வை – என்ற இராணுவ விதிமுறைகளை மீறி, வடக்கு - தெற்கு, அபிவிருத்தி காண் என்று ஜனாதிபதி இப்பொழுது உரத்த குரலில் கூறிவருகின்றார். வடக்கு கிழக்கு என்ற வன்செயல் சூறாவளிகளை அடக்கி ஒடுக்கிவிட்டு அனைத்து மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் நீராட்டுவதற்கு ஜனாதிபதி நான்கு வருட தனது பதவிக் காலத்தினுள் செய்துவிட்டார். எனவே, மேலும் அவருக்கு 6 வருடங்களை நாட்டை அரசாள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பது ஒவ்வொரு பிரஜையினதும் தலையாய கடமையாகும். அவருக்குச் செலுத்தக்கூடிய நன்றிக் கடனுமாகும்.

இலங்கையில், குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்கள் 80% அவருக்கு தமது வாக்குகளை அளிக்கக் காத்திருக்கின்றனர். இது நிச்சயம் - இன்ஷா அல்லாஹ்! என்றார் அவர். நபி (ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளை புத்த பிரானின் போதனைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி உரைநிகழ்த்தியது அனைத்து சமயத் தலைவர்களையும் கவர்ந்தது. புனித மக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட ‘அத்தர்’ பெட்டியொன்றை ஜனா திபதிக்கு அன்பளிப்புச் செய்த அவர், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மணம் பூசுவதில் மிக்க விருப்பம் கொண்டி ருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். வெளியே செல்லும்போது ஜனாதிபதி மணம் பூசி செல்லவேண்டிய முக்கியத்துவத்தை அவர் மேலும் விபரித்துக் கூறினார்.

இந்த சமய வைபவத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பிக்குமார் கலந்து கொண்டனர். அமைச்சர் ஆர்.எம்.k.பி. இரத்நாயக்க, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஆளுநர் அலவி மெளலானா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இச்சமய வைபவத்தில் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு

அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற சிறுபான்மையினரின் அபிலாஷைகளை ஏற்கனவே நிறைவேற்றித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவுக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று திட்டவட்டமாக கூறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் வழங்கவுள்ள ஆதரவு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெவ்வை, பிரதித் தலைவர் ஐ. ஏ. ஹமீத், பிரதிப் பொதுச் செயலாளர் எம். எச். ஏ. சமத், தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண அமைச்சருமான எம். எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை தலைவர் பாயிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அமீர், துல்ஷான் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

சகல இன மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும், மீண்டும் சமாதானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்குடனே தேசிய காங்கிரஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து தரும்படியும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போது கோரிக்கை விடுத்தோம். அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாங்கள் மீண்டும் இழக்க தயாராக இல்லை. வடக்கு, கிழக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சி தேர்தலுக்காக அரசியல் நடத்துபவர்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு வந்து மக்களை குழப்புபவர்களை இன்று மக்களே விரட்டி அடித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு வைத்துள்ள ஒரே ஒரு தலைவர். எனவே சிலரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு போதும் தவறிழைக்கப் போவதில்லை.

கடந்த தேர்தலின் போது 75 ஆயிரம் வாக்குகளை ஜனாதிபதிக்காக நாங்கள் பெற்றுக்கொடுத்தோம். இம்முறை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை ஜனாதிபதியின் வெற்றிக்காக பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களை பிரிக்கின்ற வரலாற்றுக்கு ஜனாதிபதி தலைமையில் நாங்கள் தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். தமிழ் மக்களுக்குத் தேவையானதை முஸ்லிம் மக்களிடமிருந்தும், முஸ்லிம் மக்களுக்குத் தேவையானதை தமிழ் மக்களிடமிருந்தும் பேசிப் பெற்றுக்கொள்ளும் சூழலை நாங்கள் கிழக்கில் தற்பொழுது ஏற்படுத்தியுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள் ளோம். யுத்தத்தை முன்னெடுப்பவர்கள் படைவீரர்கள்தான். ஆனால் அதற்கான தீர்மானத்தையும் அவர்களுக்கு அந்த யுத்தத்தில் வெற்றிகொள்ள தேவையான வசதிகளையும் பெற்றுக்கொடுப்பது அரசியல் தலைமைத்துவம்.

சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் அன்றைய தலைமைத்துவம் தோட்டாக்களை எடுத்துக் கொண்டு துப்பாக்கிகளை கொடுத்தது. அதனால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. தற்பொழுது தோட்டாக்களுடன் துப்பாக்கியை கொடுத்ததன் மூலமே பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடிந்தது. இதற்கு சரியான சந்தர்ப்பத்தில் உரிய தீர்மான த்தை எடுக்கும் அரசியல் தலைமைத்துவம் அவசியம். பயங்கரவாதத்தை இல்லாதொழி த்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமை க்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் வெற்றிபெறச் செய்ய முன்வந்துள்ளதால் சிங்கள மக்களும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.


நீதி, நேர்மையான தேர்தல் நடத்த பொலிஸ் விசேட திட்டம்

வாக்குச்சாவடிகளுக்கு தலா 2 பொலிஸ்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள், குழப்பங்கள் நடைபெறாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் (சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்) நிமல் மெதி வக்க தெரிவித்தார்.

நீதியும், நேர்மையுமான ஒரு தேர்தலை நடத்துவதற்கும் அமைதி யான முறையில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கும் ஏது வாக வாக்குச் சாவடிகள் அனைத் திலும் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான திட்டமொன்று தயாரி க்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரி வித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவ டிக்கும் தலா இரண்டு பொலிஸ் உத்தி யோகத்தர்கள் வீதம் கடமையிலீடு படுத்தப்படுவார்கள். 5 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கியதாக நட மாடும் பொலிஸ் ரோந்து சேவை யும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா ஒரு குழு வீதம் கலகம் அடக்கும் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படவும் உள்ள தென பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக பொலிஸாரின் பாதுகா ப்புடன் கட்டவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்கள் அகற்றும் வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுவி ட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்கணிப்பில் மக்கள் ஆதரவு ஜனாதிபதி மஹிந்தவுக்கே

No Image

ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றியீட்டுவார் என கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ், கடந்த தேர்தல்களின் போது மிகக் குறைந்த வீதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாக்குகளைப் பெற்ற 9 மாவட்டங்களை தெரிவு செய்து 5200 பேர் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்புக்களில் 3254 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். இது 62.2 வீதமானோர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவிப்பதாக காட்டுகிறது.

1292 பேர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இது 24.8 வீதமாக காட்டுகிறது. 654 பேர் இன்னும் தெளிவான முடிவை எடுக்காத நிலையில் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டு கருத்துக் கணிப்புகளை நடத்துகிறது. அதில் முதலாவது கருத்துக் கணிப்பின் முடிவு எமக்கு இப்போது கிடைத்துள்ளது.

இதன்படியே இந்த முடிவுகள் எமக்கு கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார்.

எமது முதலாவது பிரசாரக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அநுராதபுரம் புனித பூமியில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார். வேட்பு மனுத்தாக்கலின்போது ஜனாதிபதி வேட்பாளர்களுள் ஒருவரான சரத் கோன்கஹகே, சரத் பொன்சேகா தொடர்பாக தெரிவித்த ஆட்சேபனை விடயம் நீதித்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா அமெரிக்க பிரஜை என்ற ஆட்சேபனையை சரத் கோன்கஹகே முன்வைத்தார். ஆணையாளரினால் அவ் ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் நீதிமன்றத்தினூடாக விடயத்தைக் கொண்டுவர முடியும் என ஆணையாளர் தெரிவித்தார். அதனை கோன்கஹகே நீதிமன்றம் கொண்டு செல்வாரா இல்லையா என்பது எமக்குத் தேவையில்லை. அது கோன்கஹ கேயின் வேலை. எனினும் வேட்பாளர் சரத் பொன்சேகா அமெரிக்க பிரஜை என்று கூறியது நாங்களல்ல. சரத் பொன்சேகாவின் தற்போதைய ஊடகப் பேச்சாளராக இருப்பவர்தான். அன்றும் ஒருமுறை இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்திரு க்கிறார். அதனால்தான் இதனை ஒரு பாரதூரமான விடயமாக எண்ணவேண்டி யிருக்கிறது.

இந்த விடயம் உண்மையானால் அமெரிக்க பிரஜை ஒருவர் எமது நாட்டுக்கு தலைமைப் பதவியை ஏற்பதை மக்கள் விரும்புவார்களா? என்றும் அமைச்சர் டலஸ் கேள்வி எழுப்பினார்.

அதே நபர் சரத் பொன்சேகாவை மட்டுமல்ல உங்களையும் அமெரிக்க பிரஜை என்று கூறியிருந்தாரே என செய் தியாளர் ஒருவர் கேட்டபோது, அடுத்த செய்தியாளர் மாநாட்டில் எனது கடவுச் சீட்டை கொண்டுவந்து உங்களுக்கு காட் டுகிறேன் என அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா யுத்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றியவர் என்பது உண்மைதான். ஆனால் மக்கள் இன்று யுத்த மனோநிலையை மறந்து சுதந்திரமாக சமாதானத்துடன் அன்பாக, நேசத்துடன், நாட்டின் அபிவிருத்தியுடன் வாழவே விரும்புகிறார்கள். யுத்தம் பற்றி பேசவே மக்கள் விரும்பவில்லை.

எனவே யுத்த மனோ நிலையற்ற அபிவிருத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுகின்ற தலைமையையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக