10 நவம்பர், 2009

சமூக சேவையின் பொருட்டு சீருடையை கழற்றவும் தயார் : ஜெனரல் பொன்சேகா


நாட்டின் தற்போதைய சாதகமான நிலைமையினை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளாவிடின், சமூக சேவைகளில் ஈடுபடும் முகமாக சீருடையை கழற்றி வைப்பது தொடர்பில் தற்போது தயாராகி வருவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவருடன் தனது கொழும்பு அலுவலகத்தில் வைத்து உரையாடும் போதே மேற்படி கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அனைவரதும் கவனம் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"பல தசாப்தங்களாக நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதிகளுடனான இராணுவத்தினரின் யுத்தம் இவ்வருடம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது.

இதனை நாட்டின் அரசியல் தலைவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவார்கள் என்றால், சமூக சேவையாற்றும் பொருட்டு எனது சீருடையினை கழற்றி வைப்பதற்கு தயாராகியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதியுடன் றிறைவு பெறுகிறது.

இந்நிலையில் அவரது பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித முடிவினையும் எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. அதேவேளை குறிப்பிட்ட சேவைக்காலத்துக்குள் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இருந்த போதும் ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை நிறுத்துவதற்கு முஸ்தீபுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக