8 நவம்பர், 2009

அமெரிக்காவில் பிடிபட்ட தீவிரவாதிகள் பற்றி பரபரப்பு தகவல்; சதிதிட்டத்துக்காக 3 முறை மும்பை வந்தனர்

அமெரிக்காவில் பிடிபட்ட தீவிரவாதிகள் இந்தியாவில் சதி திட்டத்தை நிறைவேற்ற 3 முறை மும்பை வந்துள்ளது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டேவிட் ஹேட்லி, தவூர் உசேன் ரானா ஆகியோரை அமெரிக்க புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் டெல்லியில் உள்ள ராணுவ கல்லூரி, 2 சர்வதேச பள்ளிகள் உள்ளிட்ட 5 இடங்களை தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

இருவரிடமும் அமெரிக்க உளவு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தீவிரவாதிகளும் இந்தியாவில் தாக்குதல் நடத்துவ தற்காக நேரிலேயே வந்து ஆய்வு நடத்தியது இப்போது தெரிய வந்துள்ளது.

இருவரும் 3 தடவை மும்பை வந்துள்ளனர். கடைசியாக கடந்த மார்ச் மாதம் மும்பை வந்துள்ளனர். இதே போல ஐரோப்பிய நாடுகளிலும் பல முறை சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் சமீப காலங்களில் எங்கெங்கு பயணம் செய்தார்கள் என கண்டு பிடிக்க பாஸ்போர்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாதிகள் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ள விஷயம் இந்திய உளவு துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் எப்போது இந்தியா வந்தார்கள்? எங்கு தங்கி இருந்தார்கள்? எந்தெந்த இடங்களுக்கெல்லாம் சென்றார்கள்? அவர்களை யார்- யார் சந்தித்தார்கள்? என்றும் விசாரித்து வருகின்றனர்.

அவர்களை சந்தித்த நபர்களை பற்றிய விவரங்கள் கிடைத்தால் சதித்திட்டத்தின் முழு விவரங்களும் தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக