20 அக்டோபர், 2009

ராஜரட்னம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை : இலங்கை மத்திய வங்கி





கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

"பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு 52 வயதான ராஜ்ராஜரட்னம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் 'டீ ஆர் ஓ' எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

எனினும் அவர் இந்தக் கழகத்துக்கு நிதியாடலை மேற்கொள்ளும் போது, அது இலங்கையிலோ அல்லது அமெரிக்காவிலோ தடை செய்யப்பட்டிருக்கவில்லை என மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பி. கே. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியே, நிதி மோசடி தொடர்பிலான புலானாய்வுகளை மேற்கொள்ளும் பிரதான புலனாய்வு பிரிவாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் ராஜ் ராஜரட்னம் எந்த குற்றச் செயலுடனும் தொடர்புடையவர் அல்லர் என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னரான கட்டுமானப் பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு நிதி வழங்கியுள்ளார்.

எனினும் அந்த அமைப்பு இலங்கையிலும் அமெரிக்காவிலும் 2007ஆம் அண்டு நவம்பருக்கு பின்னரே தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் அதற்கு அவர் நிதி வழங்கவில்லை என விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ராஜ் ராஜரட்னத்தின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலங்கையின் பங்குகள் தொடர்பிலும் ஆராய்வதற்கான தேவை இல்லை எனவும் பங்கு பரிமாற்று ஆணையகத்தின் பணிப்பாளர் சன்னா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப சந்தேகத்துக்கு இடமானமுறையில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னத்தின் கைதைத் தொடர்ந்து இலங்கையின் பங்கு சந்தை நேற்று 3.1 சதவீத வீழ்ச்சியடைந்தது.

உலகின் 559ஆவது கோடீஸ்வரராகத் திகழும் அவருக்கு, விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கியமைக்காக கடந்த மாதம் இலங்கையின் நீதி அமைச்சு நன்றி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக