11 அக்டோபர், 2009

மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ் சென்ற தமிழக குழுவினரிடம் வேண்டுதல்


போரினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும்: அத்துடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு ஞாயிறன்று விஜயம் செய்த தமிழக தூதுக்குழுவினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கு துரையப்பா விளையாட்டரங்கத்தி்ற்கு அருகில் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து, அங்குள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் யாழ் ‘நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் யாழ் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசியல் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இந்தச் சந்திப்பையடுத்து, முகாம்களில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு, யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இந்தச் சந்திப்புக்களின்போது முகாம்களில் உள்ள மக்களை விரைவில் விடுதலை செய்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன் பிடிப்பதனால் ஏற்பட்டுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைக்கு சுமுகாமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது பதிலளித்த இந்தியக் குழுவினர், முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கவும், சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் அனுமதியோடும் இலங்கையின் உண்மையான நிலைமையை அறிவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாகவும், விசேடமாக இடம்பெயர்ந்த மக்களின் நிலைப்பாட்டை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்து செல்வதற்காகவுமே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விஜயத்தின் முடிவில் முதல்வர் கருணாநிதிக்கு தாங்கள் அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளதாகவும், இதுபற்றி மத்திய அரசாங்கத்தன் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள், இரண்டாந்தரப் பிரஜைகளாக அல்லாமல் முழு உரிமைகளுடனும் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசும் தமிழக மக்களும் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான ஓர் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு இந்திய அரசு தயாராக இருப்பதாகவும், அந்த நோக்கத்தி்ன் முதற்படியாகவே தமது இந்த விஜயம் அமைந்திருப்பதாகவும் இந்தியக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியக் குழுவினர் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான ஒரு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

முகாம்களில் இருந்’து வந்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள: தேவைகள் குறித்து கேட்டறிந்த அவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக