11 அக்டோபர், 2009

ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு- இந்திய நாடாளுமன்றக் குழு யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளுக்கு விஜயம்-

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுமாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதிகளின் அமைப்பாளர்கள், கட்சிகளின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கு பற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் ஒன்று தொடர்பில் இதன்போது விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கைக்கான ஐந்துநாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்றுமுற்பகல் யாழ். குடாநாட்டுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இக்குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து யாழ். பொதுநூலகத்தில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்த இக்குழுவினர் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அத்துடன் வேலணைப் பகுதிக்கு சென்று அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளையும் இவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட இந்தியத் தூதுக்குழுவினர் நலன்புரி நிலையங்களின் உள்ள மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர். இந்திய நாடாளுமன்றக் குழுவுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்குழுவினர் நாளையதினம் மலையகத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக