18 செப்டம்பர், 2009

இடைத் தங்கல் முகாம்கள்

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் ஜனவரிக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவர்: இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் அண்மையில் முடிந்த போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திடமான காலஅட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பது ஜனவரி மாதத்தின் இறுதிக் குள் நிறைவடையும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மன்றத்தின் உயர்ஸ்தானிகரிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது குறைந்தது 70 சதவீதம் பேர் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் முகாம்களை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்கிற தமது முந்தைய நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி நடக்கவேண்டுமானால் ஏராளமான வேலைகள் செய்யப்படவேண்டியிருக்கிறது.

சுமார் இரண்டுலட்சத்து அறுபத்தைந்தாயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருப்பதாக ஐ.நா.மன்றத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

முதல்முறையாக, இந்த முகாமில் இருப்பவர்கள் முகாம்களுக்கு வெளியில் சென்று வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் பகல்நேர அனுமதிச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, வவுனியாவில் இருக்கும் மிகப்பெரும் முகாமில் இருந்து கடந்த வாரம் வெளியேற அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சிலர், இலங்கையின் கிழக்குப் பகுதியில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அருகில் தற்காலிக முகாம்களில் இன்னமும் தங்கவைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தை சேர்ந்தவர்கள் பிபிசியிடம் உறுதி செய்துள்ளனர்.

அவர்கள் இன்னமும் எத்தனை நாட்கள் அங்கே தங்கியிருக்க வேண்டிவரும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையே நீடிக்கிறது. அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களின் விடுவிப்பு எப்போது என்பது குறித்த இறுதி உத்தரவு கொழும்பிலிருந்து வரவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக