1 செப்டம்பர், 2009

தொப்பிகலையில் கைவிடப்பட்ட கால்நடைகளைத் தேட இராணுவம் அனுமதி


மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட கால் நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு இராணுவம் அனுமதி அளித்துள்ளது.

2006 - 2007 காலப் பகுதிகளில் கிழக்கில் மேற்கொள்ளப்டப்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி தற்போது மீண்டும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இம்மாத முற்பகுதியில் இறுதியாக குடியமர்த்தப்பட்ட ஈரளற்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கால் நடை உரிமையாளர்கள் இது தொடர்பாகப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்று முதல் கைவிடப்பட்ட கால்நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அனுமதியை ஈரளற்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ரி.ஏ.விஜயவர்தன வழங்கியுள்ளார்.

அப்பகுதி கிராம சேவை அலுவலர் சின்னத்தம்பி வீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே, இராணுவ முகாம் பொறுப்பதிகாரி இந்த அனுமதி பற்றி தெரிவித்தார். மிதி வெடி அகற்றப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி சான்றிதழ் கிடைத்த 13 இடங்களைக் குறிப்பிட்டு, அந்த இடங்களில் கால் நடைகளைத் தேடிச் செல்லவும் மேய்ச்சலுக்கு விடவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஏனைய இடங்களில் மிதி வெடி அகற்றப்பட்டுள்ளமை தொடர்பான சான்றிதழ் கிடைத்த பின்னரே, அங்கு செல்வதற்கான அனுமதியும் கால் நடைகளை மேய்ச்சலுக்கு விட அனுமதியும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று ஈரளற்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கால்நடை உரிமையாளர்கள், கைவிடப்பட்ட தமது கால்நடைகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக