1 செப்டம்பர், 2009

ஜப்பானில் எதிர்க்கட்சி அமோக வெற்றி : அதிக வாக்குகள் பெற்றுச் சாதனை


ஜப்பானில் நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தனிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியீட்டியுள்ளது.

இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி 480 மொத்த ஆசனங்களில் 301 ஆசனங்களை வென்று சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் நடந்த எந்தத் தேர்தல்களிலும் அந்நாட்டின் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. தற்போது முதல்முறையாக ஜனநாயக் கட்சி அந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றியை அடுத்து, ஜப்பானை 50 வருடங்களாக ஆண்டு வந்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இத்தேர்தலில் பிரதமர் ரரோ அசோ தலைமையிலான லிபரல் கட்சி 119 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.

தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரரோ அசோ பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளதுடன் ஜனநாயகக் கட்சியின் தலைவரான யுகியோ ஹடோயாமா புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

32 வயதான யுகியோ ஹடோயாமா தமது கட்சியின் வெற்றி குறித்து வானொலியில் உரையாற்றும்போது,

"முன்னைய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளை முற்றாக மாற்றப் போவதில்லை. எனினும் இக்கொள்கைகளை ஆராய்ந்து மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவற்றுள் சிலவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டார்.

புதிய மக்கள் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் புதிய அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. புதிய பிரதமர் இரு வாரங்களின் பின்னர் பதவியேற்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக