3 ஏப்ரல், 2011

புலிகளின் நிதிசேகரிப்பு,ஆயுத கொள்வனவை தடுப்பதற்கு அமெரிக்க முன் நின்றதாம்-"விக்கிலீக்ஸ்' தகவல்



தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச செயற்பாடுகள் 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என "விக்கிலீக்ஸ்' தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப்பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு ஆகியவற்றை தடுக்கும்முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தத் திட்டத்திற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் இந்த தொடர்பாடல் குழுக்களின் செயற்பா டுகளுக்கு இந்தியாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அமெரிக்காவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. ஸ்தம்பித்துப்போன சமாதானச் செயற்பாடுகள் விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் அமெரிக்கா இருக்கின்ற பக்கத்திலேயே இந்தியாவும் இருப்பதாக அமெரிக்கா நம்பியது. இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என்ற விடுதலைப்புலிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் தீர்வினை முன்வைக்கச் செய்து விடுதலைப்புலிகளின் ஆயுத மற்றும் பண பலத்தை முறியடிப்பது என அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி.ஜே.லண்ஸ்டட் 2006 மே 3 ல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ள கேபிளில் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி அனுப்பப்பட்டு எட்டு தினங்களின் பின்னர்தான் விடுதலைப் புலிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதே வருடம் ஜூன் மாதத்துக்குப் பின் அனுப்பப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தக் குழுக்கள் பற்றி இந்தியா மகிழ்ச்சியாகக் காணப்பட்டது. இந்த சர்வதேசத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் இலங்கை கோரியுள்ளது. இந்தத் தொடர்பாடல் குழுக்களின் விவரம் மற்றும் அதன் சேர்க்கை பற்றி முதற்தடவையாக 2006 ஆகஸ்ட் 21ல் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பு??ர், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன். அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்தக் குழுக்கள் அமைந்துள்ளன. மே மாதம் மூன்றாம் திகதி அனுப்பப்பட்டுள்ள கேபிளின் படி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிக்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் அமந்தீப் சில் கிங்கிற்கும் இந்த விடயத்தில் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளன. அரசியல்தீர்வுகளை முன்வைக்குமாறு இந்தியா இலங்கையை தொடர்ந்து கேட்டுவந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

ஆனால் இந்த விடயத்தில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. ஜூன் மாதம் 12ஆம் திகதி புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் அரசியல்துறை அதிகாரி தொடர்பாடல் குழுவின் செயற்திட்டத்தை கையளிப்பதற்காக இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதி தான் இதுபற்றி இந்திய வெளியுறவுச் செயலாளர் சரண் உடன் பேசியுள்ளதாகவும், இந்தக் குழுக்களின் நியமனம் அர்த்தமுள்ளது என அவர் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அதே தினத்தில் கேபிள் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கத் தூதுவர் டேவிட் மல்பர்ட் ஒப்பமிட்டுள்ளார். இந்திய பிரதிநிதி குமார் நிதி சேகரிப்பைத் தடுக்கும் குழுவில் கனடா சேர்த்துக்கொள்ளப் படவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்னர் அமெரிக்கப் பிரதிநிதியுடன் நடந்த சந்திப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மலேஷியா என்பனவற்றை ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. ஜூன் 20ல் லன்ஸ்டட் கொழும்பிலுள்ள தனது சகா நிரூபமா ராவைச் சந்தித்தார். அமெரிக்க இந்திய கூட்டுத் திட்டங்கள் மற்றும் தொடர்பு கொள்ளல் குழுக்களை உருவாக்கல் என்பன பற்றியதாக இந்தச் சந்திப்பு இருந்தது.

கூட்டுத் திட்டங்கள் குறித்து நிரூபமா உற்சாகத்துடன் காணப்படவில்லை என்று லன்ஸ்டட் ஜூன் 21ல் அறிவித்துள்ளார். ஜூன் 22ல் இந்திய வெளிவிவகார அமைச்சின் அமெரிக்க விவகார இணை செயலாளர் ஜெய் சங்கர் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அரசியல பிரிவு அதிகாரியைச் சந்தித்துள்ளார். கூட்டுக் கையாளலை விட இந்தியா சமாந்திரமான போக்கில் செல்லவுள்ளதாகவும் இது தாக்கம் மிக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு "விக்கிலீக்ஸ்' வெளியிட்டுள்ள இரகசிய கேபிள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுஎவ்வாறு இருந்தபோதிலும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அமெரிக்காவுடன் இலங்கையும் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக தொழிற்படத் தொடங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக