16 நவம்பர், 2011

மறைந்த தோழர் சிவதாசன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி-

தோழர் சிவதாசன் அவர்களின் மறைவையொட்டி அன்னாருக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
தோழர் சிவதாசன் அவர்கள் தனது இளம்பராயத்திலேயே பொதுவுடமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு இடையறாது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து வந்தவர். அத்துடன் தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர் நலன்சார்ந்த போராட்டங்களிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட தோழர் சிவதாசன் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை தான் கொண்டிருந்த கொள்கையினின்று வழுவாது இயங்கியவர்.
80களில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில் அவர் தன்னை முற்போக்கு சக்திகளுடன் இணைத்துக்கொண்டு இயங்கினார். முதலாவது வடக்கு-கிழக்கு மாகாணசபையிலும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்து இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் அவ்வேளைகளில் அடித்தட்டு மக்களுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் தான் சார்ந்த அமைப்பின் ஊடாக செய்துவந்தார். சிறந்த அரசியல் அனுபவம் கொண்டவரும், அடித்தட்டு வர்க்க மக்களின் சிறப்பான வாழ்வுக்காக பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் மத்தியிலும் அயராது தன்னை ஈடுபடுத்தி வந்தவருமான தோழர் சிவதாசன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
அன்னாருக்கு புளொட் அமைப்பினராகிய நாம் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக