22 ஜனவரி, 2011

மோதல்கள் நடந்த இடங்களில் சிறப்பான புனர்வாழ்வு நடவடிக்கை ஐ. நா. பிரதி செயலாளர் திருப்தி


முன்னர் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதிகளை மீளக் கட்டியமைக்கும் நடவடிக்கைகள் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணைப்பதிகாரியுமான கத்தரின் ப்ராங்க் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அம்மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மோதல்களால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தமது வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு நிலைக்குக் கொண்டுவருவது சிரமமானதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியமர்ந்த மக்களுக்கான தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இல்லை. அவர்கள் பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், இயங்குகின்றன. அடிப்படை சமூக சேவைகள் வழங்கப்படுகின்றன. வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துகொடுக்கப்ப ட்டுள்ளன.

இம்மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கே நாம் இருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் இம்மக்களின் உட்கட்டுமானத் தேவைகளை நிறைவேற்ற முதலீடுகளைச் செய்துள்ளது. இந்த முதலீடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுடன் இணைந்தவையாக இருந்தால் மேலும் சிறப்பாக அமையும் என்றும் கத்தரின் குறிப்பிட்டார்.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணைப்பதிகாரியு மான கத்தரின் ப்ரங்க், நேற்று முன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கும், வடக்கின் முல்லைத்தீவு மாவட்டம் தேறாவில், வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீள் குடியமர்ந்திருக்கும் மக்களையும் பார்வை யிட்டிருந்தார். மோதல்களால் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் மீள்குடியமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி தேவையெனக் கோரிக்கை விடுத்திருந்த அவர், எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய உடனடி நிதியிலிருந்து 6 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணை ப்பதிகாரியுமான கத்தரின் ப்ராங்க் அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக