22 ஜனவரி, 2011

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு பாரபட்சமின்றி மேலதிக நிவாரணம்



மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், நிவாரணம் வழங்கவும்
10 பேர் கொண்ட அமைச்சுகளின் உயரதிகாரிகள் குழு நியமனம்
வடக்கு, கிழக்கு உட்பட சில மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகப் பாதிக்கப்பட்ட சகலருக் கும் மேலதிக நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கென தற்போதைய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களைத் தளர்த்தியும், வருமானத்தைக் கருத்திற்கொள்ளாமலும் நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக 10 அமைச்சுகளின் அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தார்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அதேபோல் மத்திய, ஊவா மாகாணங்களிலும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் 2,80,000 குடும்பங்களைச் சேர்ந்த 10,61,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமரவீர அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் தேவையான புகலிடம் மற்றும் சமைத்த உணவு, உலருணவு போன்ற உடனடித் தேவைகள், அனைத்து உதவிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுத்த தாகவும் அமைச்சர் அமரவீர அறிவித்துள்ளார்.

அதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிவாரணம் வழங்க வேண்டு மென்றும் இதற்கு சுற்றறிக்கை அறிவுறுத்தல் தளர்த்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் பிரேரித்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக் கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் வருமானத்தைப் பாராமலும், அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதைக் கருத்திற் கொள்ளாமலும் நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங் கியதாக அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார்.

அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்கவும் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் ஆராயும் பொருட்டு சம்பந்தப்பட்ட 10 அமைச்சுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சர் யாப்பா மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக