6 ஜனவரி, 2011

நாவலப்பிட்டியில் சட்டவிரோத கேபிள் டிவி நிலையம் முற்றுகை

நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் பிரதான சந்தேக நபர் கைது

மலையகப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையமொன்றை நாவலப்பிட்டி பொலிஸார் முற்றுகையிட்டு ள்ளனர்.

இதனை நடாத்திவந்த பிரதான சந்தேக நபரை தொலைத் தொடர்பு சாதனங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி நகரத்தை அண்மித்த கடுகஞ்சேனை கெட்டபிலா தோட்டத்தை உள்ளடக்கியதாகவே இச்சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையம் இயங்கி வந்துள்ளது.

கைவிடப்பட்டிருந்த வீடொன்று இதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், இங்கிருந்தே கேபிள் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையம் நீண்டகாலமாக இயங்கிவந்த போதும் இதன் பயனாளர்கள் மற்றும் இயக்குபவர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்திருப்பதாக நாவலப்பிட்டிப் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நிலையத்திற்கும் புலிகள் இயக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது பற்றி விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக நாவலப்பிட்டிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையத்திலிருந்த அன்டனாக்கள், ரிமோட் கொன்டோலர்கள் உட்பட பல இலத்திரனியல் சாதனங்களையும், புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள் குறித்த சீடிக்களையும் மீட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நாவலப்பிட்டி மஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக