16 பிப்ரவரி, 2010

பொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம்



21 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்து க்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்ட னையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பலிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத் தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்


17 மாவட்டங்களின் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் வேட்பு மனு கைச்சாத்து




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 17 மாவட்டங்களின் வேட்பு மனுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று மாவட்டக் குழுத் தலைவர்களினால் கையொப்பமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்ட வேட்பு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு நேற்றுக் காலை 10.30 மணி சுப வேளையில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களில் நேற்று கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ம் திகதிக்குள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேட்பு மனுக்கள் கையொப்பமிடப்பட்டு பூர்த்தி செய்யப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் மாவட்டத் தலைவர்கள் வேட்பு மனுப்பட்டியலில் கைச்சாத்திட்டதுடன் 26ம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏனைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் விளக்க மளித்த அமைச்சர்;

எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடுவர் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது;

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் தேர்தல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் செயற்பாட்டுத் திட்டமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்குமுன் பாராளுமன்ற த்திலிருந்தவர்களுடன் புதியவர்களுக்கும் இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் முதல் தடவையாக சகல மாவட்டங்களிலும் முன்னணி போட்டியிடும் தேர்தல் இதுவாகும்.

இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே இருந்தவர்களைத் தவிர ஆயிரம் விண்ணப்பங்கள் புதிதாக கிடைத்திருந்தன.

அதற்கிணங்க நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சகல மாவட்டங்களிலுமுள்ள அனுபவமுள்ள அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் புதிய வேட்பாளர்களாகத் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 26ம் திகதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுவதால் 26ம் திகதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் 27ம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் விசேட மத வைபவங்களைத் தொடர்ந்து 27ம் திகதி வேட்பாளர்கள், அனைவரும் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இந்நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதான பெளத்த மத வழிபாடு அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விஹாரையில் இடம்பெறுவதுடன் பெளத்த மத வேட்பாளர்கள் அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர்.

அதேவேளை ஏனைய மதங்களைச் சார்ந்தோர் அநுராதபுரத்தின் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மத வழிபாடுகளில் கலந்துகொள்வர்.

இதனையடுத்து 27ம் திகதி அரசாங்கத்தின் கொள்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை மற்றும் மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் தொடர்பான அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுப்பார்கள்.

அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் கட்சிக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகி ன்றனர்.

கட்சிக் கொள்கைகளைமீறி தேர்தல் ஆணையாளரினதும் பொலிஸாரினதும் வழிகாட்டல்களை மீறி நடப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படமாட்டாது.

மஹிந்த சிந்தனையை முன்கொண்டதாகவே பொதுத் தேர்தல் விஞ்ஞாபனமும் அமையும். உலகில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சவால்கள், அழுத்தங்களை எதிர்கொள்ளப் பலமுள்ள 3ல் இரண்டு பலம் மிக்க அரசாங்கத்தை அமைப்போம்.

அதன் மூலம் முழுநாடும் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும்.

கடந்த தேர்தலில் நாம் அமோக வெற்றிபெற்றுள்ளதைப் போன்றே இம்முறையும் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ரீதியில் வெற்றிபெறுவோம்.

இன்றுள்ள அரசியலமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது சாத்தியமில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் அரசாங்கம் மாகாண சபைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் குழுத் தலைவர்களே தத்தமது மாவட்ட வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுவில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.




கொழும்புத்துறை குண்டு வெடிப்பு: 2 மாணவர் மரணம்; 6 பேர் காயம்



யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடி ப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக் கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.45 மணியளவில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகாமையில் பந்துபோன்ற வொன்று காணப்பட்டதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் சிலர் அதனை எடுத்து பரிசீலித்துள்ளனர்.

அவ்வேளை அங்கு வந்த பெரியவர் ஒருவர் அதனை வீசிவிடுமாறு கூறியதையடுத்து மாணவர்கள் தூரத்தில் எறிந்தபோதே அது வெடித்துச் சிதறியுள்ளது. அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்ககள் சம்பவ இடத்தி லேயே கொல்லப்பட்டதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.




பொன்சேகாவின் மருமகனுக்கு பிடிவிறாந்து:
தனுகவின் தாயின் வங்கிப் பெட்டகத்திலிருந்து ஏழு கோடியே 50 இலட்சம் ரூபா கண்டுபிடிப்பு


சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலக்கரத்னவின் தாயாரின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ஏழு கோடியே 50 இலட்சம் (75 மில்லியன்) ரூபாவை பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். கொழும்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றினை நேற்று சி..டியினர் சோதனை யிட்டபோதே இந்தப் பணத்தை கண்டுபிடித் ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

5 இலட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், 106 ஸ்டேர்லிங் பவுண்கள் மற்றும் 15 மில்லியன் ரூபா ஆகியன இவரது கணக்கிலிருந்து கண்டுபிடிக்கப்ப ட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். நீதிமன்ற அனுமதியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விசேட ஊடக வியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,

சி..டியினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வங்கியின் நான்கு பாதுகாப்பு பெட்டகங்களை சோதனையிட சி..டியினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றில் தேடுதலுக்கான அனுமதியைப் பெற்றே இந்த நடவடிக்கையில் இறங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற அனுமதி பெற்றதையடுத்து சி..டியினர் நான்கு பெட்டகங்களையும் சோதனையிட்டுள்ளனர். இதன் போதே தனுக திலக்கரத்னவின் தாயாரான அசோக்கா திலகரத்தனவின் வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பெருந் தொகையான பணத்தை கண்டுபிடித்துள்ளனர் என்றார். இதேவேளை சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவை கைது செய்வதற்கான பிடி விறாந்து ஒன்றை கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் நேற்று பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட பணம், குறித்த வங்கியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அந்தப் பணத்தை நீதிமன்ற கணக்கிற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக குற்றப்புலனா ய்வு பிரிவு பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை, மத்திய வங்கியின் நிதிப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிப்பரிமாற்று கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு மேலதிக விசாரணைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பெருந்தொகையான பணம் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது? எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது?

இது தொடர்பான விசாரணைகளை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளவுள்ளனர்.தனுக திலகரத்தனவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் மூலம் தனுக திலகரத்ன முன்பிணை கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

எல்லோரும் மாவட்ட அமைப்பாளர்களே

தேர்தல் தொகுதி மட்டத்தில் இதுவரை செயற்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் என்ற பதவியை இனிமேல் மாவட்ட அமைப்பாளர் பதவி என திருத்தியமைக்குமாறு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (15) பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஒரு குழு என்ற ரீதியில் செயற்பட்டு தமது வாக்கு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக அதிகரிப்பதையடுத்து தனிப்பட்ட அபிப்பிராய வாக்குகளை பெறும் போட்டி நிலையை தவிர்த்துக்கொள்வது உட்பட புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது மற் றும் மக்கள் அபிமானத்துடன் கூடிய அரசியல்வாதிகள் குழுவொன்றை உரு வாக்குவது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும்.

இதுவரை செயற்படுத்தப்பட்ட தொகுதி அமைப்பாளர் பதவி ஊடாக சிலர் அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு போட்டி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்ததே. இவ்வாறான போட்டி நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் அதிருப்தி நிலையை தோற்றுவித்துள்ளது. சமூக ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இது பெரும் தடையாக உள்ளது. இந்த குறைபாட்டை நீக்குவதற்கு மாவட்ட அமைப்பாளர் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒழுக்க விழுமியங்களை பேணும் அதேவேளை ஒருங்கிணைந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது அதிகார பிரதேசத்தை மீளமைப்பது இந்த செயற்பாட்டின் மற்றொரு நோக்கமாகும்.

ஒரு குழுவாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் அமோக வெற்றி பெறுவதை இலகுவாக்கும் வகையில் புதிய திருத்தம் உதவும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது.

நடைமுறையில் இருந்த தேர்தல் முறைக்கு ஏற்ப அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு போட்டித் தன்மையுடன் செயற்படவேண்டியுள்ளதுடன் அதனால் ஏற்படும் பல்வேறு மோதல்கள் பிரசார போஸ்டர் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை மேற்படி திருத்தம் பெருமளவு குறைக்கும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது.



டெங்கு நுளம்பு சோதனை திட்டம்:
20 நாட்களுக்குள் 16 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளை சோதனையிட நடவடிக்கை

5657 டெங்கு நோயினால் பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு



இருபது நாட்களுக்குள் 16 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளை டெங்கு நுளம்பு பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டம் அமைச்சின் கீழுள்ள டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஊடாக அடுத்த வாரம் முதல் இருபது நாட்களுக்கு முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

இதேவேளை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையும் 5657 பேர் நாட்டில் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள் ளதாகவும் இவர்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

தற்போது யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமடைந்திருப்பதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் பெருக்கக் கூடிய இடங்கள் தொடர்பாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொள்ளவிருக்கும் பரிசோதனை குறித்து அப்பிரிவின் அதிகாரியொருவர் கூறுகையில், நாட்டில் 65 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் காரணத்தினால் இப்பிரிவுகளிலுள்ள வீடுகளையும், சுற்றாடலையும் சுகாதாரத் தொண்டர்களை ஈடுபடுத்தி சோதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு மருத்துவ அதிகாரி அலுவலகப் பிரிவுக்கு ஐம்பது தொண்டர்கள் படி 65 பிரிவுகளுக்குமென 3250 தொண்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 25 வீடுகளைப் சோதிக்கவேண்டும். இதற்குரிய அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

இச்சோதனையின்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சுற்றாடலைக் கொண்டிருக்கும் வீடுகள் இனம் காணப்படுமாயின் அவ்வீடுகளின் உரிமையாளர்களுக்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்படும். தவறும் பட்சத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக