4 பிப்ரவரி, 2010


ஹைதி தீவில் பூகம்ப சாவு 2 லட்சமாக உயர்வு



அமெரிக்கா அருகே கரிபியன் கடலில் உள்ள குட்டி நாடான ஹைதி தீவில் கடந்த மாதம் 12-ந் தேதி கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வீடுகள் மற்றும் அதிபர் மாளிகை என அனைத்தும் தரைமட்டமாயின.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட உலக நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அங்குள்ள மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றன.

பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்ததால் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். தொடக்கத்தில் 1 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் தோண்ட தோண்ட பிணங்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது சாவு எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 3 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

இந்த தகவலை ஹைதி பிரதமர் ஜூன்- மாஸ் பெல்லரிவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஹைதியில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான்கிமூன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஹைதிக்கான ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் கலந்து கொண்டார்.

அப்போது கடந்த 2004-ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் போது நடந்த மீட்பு பணி போன்று அனைத்து அமைப்புகளுடன் இணைந்து அதிரடியாக நடத்த வேண்டும் என்று பில் கிளிண்டனிடம் பான்கிமூன் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே ஹைதியில் இருந்து 33 அனாதை குழந்தைகளை கடத்த முயன்றதாக அமெரிக்க கிறிஸ்தவர்கள் மீது சந்தேகப்பட்டு அவர்களை கைது செய்தது துரதிருஷ்வசமானது. ஏனென்றால் அக்குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் மிகவும் நல்லது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக