25 ஜனவரி, 2010



புத்தளம் மன்னார்வீதி 108 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு-


கடந்த 108 வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த புத்தளம் மன்னார்வீதி இன்று மீண்டும் பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வீதியை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். குறித்த வீதி 105கிலோமீற்றர் வரையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தளத்திலிருந்து மன்னாருக்கும், மன்னாரிலிருந்து புத்தளத்திற்குமான போக்குவரத்துக்களில் நேர சிக்கனம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரணைமடு குடிநிர் விநியோகத் திட்டம் ஆரம்பமாகிறது-
http://www.tamilnation.org/images/defacto/suresh/28936151.IMG_4650copy.jpg
கிளிநொச்சி இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்தினை இன்னும் இரு மாதங்களில் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு 7100மில்லியன் ரூபாய் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முழு யாழ். குடாநாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் இரணைமடு குடிநீர் திட்டம் அமையவுள்ளதுடன், இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியினதும், அரசாங்கத்தினதும் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரணைமடு குடிநீர் திட்டம் யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் குடிநீர்ப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தற்காலிக விசாவில் தங்கியிருப்போரைக் கைது செய்வதில் சிக்கல்-
http://www.goegypt.org/images/10193858.jpg

சுற்றுலாத்துறைக்கு முதலிடம் வழங்கும் நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்காலிக விசாவின் மூலம் இங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளைக் கைதுசெய்ய முடியாதுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தகையவர்களை சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்வதால் இலங்கை தொடர்பாக வெளிநாடுகளில் தவறான கருத்துக்கள் நிலவக் கூடுமென குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு இங்கு வருகைதரும் 80நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விமானநிலையத்தில் வைத்து 30நாட்கள் சுற்றுலா விசா வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். திருமலை, கல்முனை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை பிரசேதங்களில் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் தொழில்புரிவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உரிய விசாரணை நடத்தி விசா காலாவதியான வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இலங்கையிலிருந்து அனுப்பிவைத்துள்ளதாகவும், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதவாறு தடைப்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வசிப்போர் வாக்களிக்க கடவுச்சீட்டும கட்டாயம்-





வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில் நாடு திரும்பி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்கள் தேசிய அடையாள அட்டை தவிர கடவுச்சீட்டையும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மோசடிகளைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தேர்தல்கள் செயலக தகவல்களின்படி தேர்தல் வாக்குப் பட்டியலில் வெளிநாடுகளில் வசிக்கின்றவர்களை அடையாளப்படுத்துவதற்கான விசேட குறியொன்று பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த வாக்காளர் வெளிநாட்டில் வசிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

76முன்னாள் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் கையளிப்பு-




புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 76பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாமிலுள்ள 20பேரும், பொலநறுவை வெலிகந்தை புனர்வாழ்வு முகாமிலுள்ள 56பேரும் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிகழ்வு யாழ். தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாமிலும், வெலிகந்தை புனர்வாழ்வு முகாமிலும் இன்றுபிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றதாகவும், இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில் 12பெண்கள் அடங்குவதாகவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.


3492 முன்னாள் புலி உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி-

News Photo


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புனர்வாழ்வு முகாம்களிலுள்ள 3ஆயிரத்து 492 புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் வாக்களிக்கவென 13விசேட தேர்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வவுனியா முகாம்களிலுள்ள 20ஆயிரத்து 184பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் வாக்களிக்கவென 16வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக